தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பிரக்னா பாரதி ஏற்பாடு செய்திருந்த, '2030ஆம் ஆண்டுக்குள் இந்தியா பொருளாதார வல்லரசு' மாநாட்டில் பாரதிய ஜனதா மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர், “நாம் ஊழலுக்கு எதிராகப் போராட வேண்டும். அதே நேரத்தில் முதலீடு செய்வோருக்கு வெகுமதி அளிக்க வேண்டும்.
வியாபாரிகளை சரக்கு மற்றும் சேவை வரி மூலம் பயமுறுத்த வேண்டாம். 21ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய மடத்தனம் சரக்கு மற்றும் சேவை வரி. இது மிகவும் குழப்பமாக உள்ளது. இதன் விண்ணப்ப படிவத்தை நிரப்புவதும்கூட மிகவும் கடினமானது.
ராஜஸ்தான் பார்மர் (பாலைவன மாவட்டம்) பகுதியிலிருந்து ஒருவர் வந்தார். அவர் வசிக்கும் பகுதியில் மின்சாரம் இல்லை. அவரால் எவ்வாறு சரக்கு மற்றும் சேவை வரி படிவத்தை, இணையத்தில் பதிவேற்ற முடியும்?
நாடு அவ்வப்போது எட்டு விழுக்காடு வளர்ச்சியை தொட்டாலும், காங்கிரஸ் தலைவர்கள் கொண்டுவந்த சீர்த்திருத்தங்களால் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் பி.வி. நரசிம்மராவ் தொடங்கிவைத்த சீர்த்திருத்த திட்டங்களுக்காக அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்” என்றார்.
கடந்த 50 ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு சவால்விடும் அளவிற்கு சீனா வளர்ந்துவிட்டது. ஆனால் இந்தியாவின் பொருளாதார மந்தநிலை காணப்படுகிறதே என்ற கேள்விக்கு, “நமது தற்போதைய பிரச்னை தேவை பங்களிப்பு குறைவாக உள்ளது. மக்களிடம் போதிய பணம் இல்லை. இதனால் பொருளாதார சுழற்சியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
2030ஆம் ஆண்டுக்குள் இந்தியா நிச்சயம் பொருளாதார வல்லரசாக மாறும். அதற்கு நாம் 10 விழுக்காடு வளர்ச்சியை எட்டியிருக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க:ரயிலில் மதத்தின் பெயரில் யாருக்கும் முன்பதிவு இல்லை - பியூஷ் கோயல்