கரோனா பரவலைத் தடுக்க பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டிலுள்ள ஏழை, எளிய மக்களையும், பொது முடக்கத்தால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள மக்களை பாதுகாக்கும் வகையில் 1.7 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பிரதம மந்திரி கரீப் கல்யாண் தொகுப்பை, கடந்த மார்ச் 26ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
இந்தத் தொகுப்பின் கீழ், பெண்கள், ஏழைகள், மூத்த குடிமக்கள், விவசாயிகள் ஆகியோருக்கு இலவச உணவு தானியங்கள், நிதி உதவிகளை அளிக்கவிருப்பதாக அரசு அறிவித்தது.
இந்த அறிவிப்புகள் மக்களை உரிய முறையில் சென்று அடைகிறதா எனத் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், இதுவரை இத்திட்டத்தின் கீழ் பிரதமர் உஜ்வாலா யோஜனா பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு 8,488 கோடி மாற்றப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
இத்தொகுப்பின் கீழ் 8.58 கோடி இலவச உஜ்வாலா சிலிண்டர்கள் வழங்கப்பட்டும், 9.25 கோடி சிலிண்டர்கள் முன்பதிவு செய்யப்பட்டும் உள்ளன. மேலும், முன்னர் முடிவு செய்தபடி, உஜ்வாலா பயனாளிகளுக்கு ஜூன் 30ஆம் தேதி வரை உள்ளடங்கிய மூன்று மாதங்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.