வெங்காய விலை சமீப ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. தேசிய தலைநகர் பகுதியில் ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த விலைவாசி உயர்வால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக உள்நாட்டு உற்பத்தி 30 முதல் 40 சதவிகிதம் வரை குறைந்துள்ளதே இந்த பற்றாக்குறைக்குக் காரணம்.
இதனிடையே மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில், "வெங்காய விலையைக் கட்டுக்குள் வைக்க ஒரு லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
மத்திய அரசின் எம்.எம்.டி.சி (MMTC) என்ற பொதுத்துறை நிறுவனம் இந்த வெங்காய இறக்குமதி மற்றும் விநியோக நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது. இந்த முடிவானது சனிக்கிழமை நடைபெற்ற செயலர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.