புதுச்சேரி அமைச்சரவையில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 10 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கோப்பு துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதை அவர் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார். இந்த கோப்புக்கு ஒப்புதல் பெற தாமதம் ஏற்பட்டால், அதற்கு கிரண்பேடி தான் காரணம் என்று முதலமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியிருந்தார்.
மருத்துவக் கல்வியில் உள் ஒதுக்கீடு: ஆளுநர் மாளிகையை அரசுப் பள்ளி மாணவர்கள் முற்றுகை - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
புதுச்சேரி: மருத்துவக் கல்வியில் உள் ஒதுக்கீடு வழங்கக் கோரி அரசுப் பள்ளி மாணவர்கள் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், புதுச்சேரி மாணவர் காங்கிரஸ் தலைவர் கல்யாணசுந்தரம் தலைமையில், புதுச்சேரி ஜீவானந்தம் அரசுப் பள்ளி மாணவர்கள் இன்று (நவம்பர் 20) ஆளுநர் மாளிகையை முற்றுகையிட காராமணிக்குப்பம் பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்தனர். அப்போது, மிஷின் வீதி அருகே வந்த மாணவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால், ஆளுநருக்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதற்கிடையில், ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்துக்கு வந்த முதலமைச்சர் நாராயணசாமி, மாணவர்களுடன் உரையாற்றினார். அப்போது, அரசு மருத்துவக் கல்வி இட ஒதுக்கீட்டில் இந்த ஆண்டிலேயே சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.