அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மத்திய அரசுக்கு எதிரான #ஸ்பீக் அப் ஃபார் ஜாப்ஸ் (#SpeakUpForJobs) எனும் சமூக ஊடக பரப்புரையை தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, இன்று (செப்டம்பர் 10) தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "நாடு எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்னைகள் குறிப்பாக வேலைவாய்ப்பின்மை, மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு உள்ளிட்டவை குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது மௌனத்தை கலைக்க வேண்டும். இன்று, நாட்டின் இளைஞர்கள் வேலைவாய்ப்பு, நல்ல எதிர்காலம் ஆகியவற்றைக் கோருகின்றனர். ஆனால், பிரதமர் மோடி அமைதி காக்கிறார். தேச இளைஞர்களின் பிரச்னைகளை புறக்கணிக்கிறார்.
கோவிட்-19 ஊரடங்கின் போது தான் வேலைவாய்ப்பு இழப்புகள் அதிகரித்தது. கரோனா பெருந்தொற்றுநோய் இந்தியாவை அடைவதற்கு முன்பான காலத்திலேயே நாங்கள் எச்சரித்தோம். பிப்ரவரி மாதமே வரும் பேரிடரை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும் என்றோம். ஆனால் இந்த அரசு அப்போது எங்களை கேலி செய்தது. ஏழை மக்களின் கணக்குகளில் பணம்போட வேண்டும், நமது பொருளாதாரம் மற்றும் நமது நாட்டின் இளைஞர்களின் எதிர்காலத்தின் முதுகெலும்பாக இருக்கும்.
சிறு மற்றும் நடுத்தர தொழில்களைக் காப்பாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும், இந்தியாவின் செயல் உத்தி தொழில்களை காக்க வேண்டும் என்ற மூன்று முக்கியமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்தேன். ஆனால் அதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. இந்தியப் பொருளாதாரத்தை காப்பாற்ற 15-20 பெருமுதலாளிகளின் கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்தது.
தற்போது அவர்களது நண்பர்களுக்கு உதவ இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களை, தனியார்மயமாக்க முனைகிறது. இந்திய பொருளாதாரத்தை மீண்டும் மீட்சிப் பாதையில் கொண்டுச் செல்ல தனது சில 'நண்பர்களின்' கருத்துக்களை மட்டுமே செவிமடுக்காமல், துறைசார் வல்லுநர்களின் ஆலோசனைகளையும் கேட்க வேண்டும். சீனாவுடனான எல்லை பதற்றங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு பதில் அளிக்க வேண்டும். நீங்கள் மிக நீண்ட காலமாக எதுவும் பேசவில்லை. இப்போதாவது பேசுங்கள். முழு நாடும் உங்களை நோக்கி நிற்கிறது" என கூறினார்.