2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்புத் தகுதியை மத்திய அரசு நீக்கியது. இதனால், இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களில் செயல்படுத்தப்படும் சட்டங்கள் காஷ்மீர் மக்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டது. பின்னர், காஷ்மீர் மாநிலமானது ஜம்மு காஷ்மீர், லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டது. மேலும், காஷ்மீரில் நடைமுறையிலிருந்த பல்வேறு சட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டன.
காஷ்மீரில் 15 ஆண்டுகள் வரை வசிக்கும் நபர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டு வந்தது. அவை தற்போது பத்து ஆண்டுகளாக குறைக்கப்பட்டன. காஷ்மீர் மக்கள் மட்டுமே, அரசுப் பணிக்காக விண்ணப்பிக்கும் முறையை மாற்றி நாட்டின் அனைத்து பகுதி மக்களும் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.