வெங்காய தட்டுப்பாட்டின் காரணமாக வெங்காய ஏற்றுமதிக்கு கடந்த மாதம் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி, பெங்களூரு ரோஸ், கிருஷ்ணாபுரம் வெங்காய வகைகளை அடுத்தாண்டு மார்ச் 31ஆம் தேதி வரையில் 10 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிற்கு ஏற்றுமதி செய்ய மத்திய வர்த்தக அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல் இதுகுறித்து வெள்ளிக்கிழமை பதிவிட்டிருந்த ட்வீட்டில், " விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும், அவர்களின் வாழ்வை வளப்படுத்தவும் 10ஆயிரம் மெட்ரிக் டன் வீதம் பெங்களூரு ரோஸ், கிருஷ்ணாபுரம் வகை வெங்காயங்களை ஏற்றுமதி செய்ய அரசு அனுமதியளிக்கிறது" எனத் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை (அக்.9) வெளியான அறிவிப்பில், அடுத்தாண்டு மார்ச் 31ஆம் தேதிவரை வெங்காய ஏற்றுமதியை சென்னை துறைமுகத்தின் வழியாக மட்டுமே செய்யவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்றுமதியாளர்கள், ஆந்திரா, கர்நாடக தோட்டக்கலைத் துறையிடம் வெங்காயத்தின் அளவு குறித்து சான்றிதழ் பெறவேண்டும் என்றும் ஏற்றுமதியை கண்காணிக்கும் வகையில், உள்ளூர் வர்த்தக இயக்குநரகத்தில் ஏற்றுமதியாளர்கள் பதிவு செய்திருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.