தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 13, 2020, 4:58 PM IST

ETV Bharat / bharat

முதல்கட்ட தளர்வில் மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன?

டெல்லி: முதல்கட்ட தளர்வின்போது பொது இடங்களில் கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

gvt of india
gvt of india

கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், ஊரடங்கால் முடங்கிக் கிடந்த பொருளாதாரத்தை மீட்கும் நோக்கில் கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல்கட்ட தளர்வு அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தகுந்த இடைவெளி, முகக்கவசம் போன்ற சில கட்டுப்பாடுகளுடன் உணவகங்கள், மதவழிபாட்டுத் தலங்கள், மால்கள் முழுச் செயல்பாட்டிற்கு வந்துள்ளன. இதனிடையே, கரோனா பெருந்தொற்று முன்பை வித அதிதீவிரமாகப் பரவிவரும் சூழலில், முதல்கட்ட தளர்வின்போது பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

'COVID-appropriate behaviour' என்ற பெயரில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், முன்னெச்சரிக்கை வழிமுறைகள் வண்ணமிகு சித்திரங்களைக் கொண்டு தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.

உணவகம், ஹோட்டல்கள், அலுவலகங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்:

  • அறிகுறியற்ற ஊழியர்களை மட்டுமே வளாகத்துக்குள் அனுமதிக்க வேண்டும்
  • ஒரே இடத்தில் அதிக கூட்டம் கூடுவதைத் தடுக்க வேண்டும்
  • ஊழியர்கள் தகுந்த சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுகிறார்களா என்பதை உறுதிசெய்ய வேண்டும்
  • அலுவலகம், உணவகம், உணவக வளாகம் ஆகியவற்றை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்
  • கை கழுவுவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்
  • மின்தூக்கிகளில் (லிப்ட்) குறிப்பிட்ட நபர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். எஸ்கலேட்டர்களில் இரண்டு படிக்கட்டுக்கு ஒருவர் மட்டுமே நிற்க வேண்டும்
  • உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களின் உடல் வெப்பத்தை அறிந்த பிறகே, டெலிவரிக்கு அனுமதிக்க வேண்டும்
  • உணவகங்களில் வெறும் 50 இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்
  • ஹோட்டல்களில் தங்கவரும் விருந்தினர்களின் பொருள்களைக் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். ஹோட்டல் ஊழியர்களுடன் இன்டர்காம் அல்லது செல்போன் வாயிலாகவே விருந்தினர்கள் தொடர்புகொள்ள வேண்டும்
  • வளாகத்தைக் காற்றோட்டமாக வைத்திருக்க வேண்டும். ஏசி போடும்போது 24-30 என்ற அளவிலேயே வெப்பநிலையை வைத்திருக்க வேண்டும்

வழிபாட்டுத் தலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்:

  • வழிபாட்டுத் தலங்களில் பிரசாதம் வழங்குவதற்கோ, புனித நீர் தெளிப்பதற்கோ அனுமதி கிடையாது
  • சிலைகளையும், புனித நூல்களையும் தொடக் கூடாது
  • அன்னதானம் வழங்கப்பட்டால் தகுந்த இடைவெளியைப் கடைப்பிடித்து வாங்க வேண்டும்
  • பதிவு செய்யப்பட்ட கடவுள் வாழ்த்துப் பாடல்களை மட்டுமே இசைக்க வேண்டும்

இதுதவிர, முகக்கவசம் அணிவது, அடிக்கடி கை கழுவுவது, தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிப்பது ஆகிய பாதுகாப்பு நடைமுறைகள் அனைத்து இடங்களிலும் கட்டாயமாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களில் கண்டிப்பாக எச்சில் துப்பக்கூடாது என்றும், ஆரோக்கிய சேது செயலியை அனைவரும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : காவல் துறையினரின் நிறவெறிக்கு எதிராக பிரேசில் நாட்டினர் ஆர்ப்பாட்டம்

ABOUT THE AUTHOR

...view details