உள்நாட்டு விநியோகத்தை ஊக்குவிக்கும்வகையில் வெங்காய இறக்குமதிக்கான தளர்வுகள் ஒன்றரை மாதங்கள் அதாவது அடுத்தாண்டு ஜனவரி 31ஆம் தேதிவரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 21ஆம் தேதி, வெங்காய இறக்குமதியை எளிமைப்படுத்தும் நோக்கில் பூச்சிக்கொல்லி மருந்து அடிப்பதற்கான வழிமுறைகளில் மத்திய அரசு தளர்வுகள் அறிவித்தது. டிசம்பர் 15ஆம் தேதிவரை தொடரும் என அறிவிக்கப்பட்டது.
இது குறித்து மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "சந்தையில் வெங்காய விலை உயர்வைக் கண்டு மக்கள் அச்சம் கொள்ளும் நிலையில், இறக்குமதிக்கான தளர்வுகள் சில நிபந்தனைகளுடன் ஜனவரி 31ஆம் தேதிவரை நீட்டிக்கப்படுகிறது.
பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கப்படாமல் இந்திய துறைமுகத்திற்கு வந்தடைந்த வெங்காயங்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் வழிமுறைகளைப் பின்பற்றி பூச்சிக்கொல்லி மருந்து அடிக்க வேண்டும். அலுவலர்கள் தீவிர ஆய்வுசெய்த பிறகே, வெங்காயம் விநியோகத்திற்காக வெளியிடப்பட வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.