இந்தியாவில் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கால் தொழில் துறை முற்றிலும் முடங்கியுள்ளதால் மாநில அரசுகளின் வருமானம் பெருமளவு குறைந்துள்ளது.
இதனால் அத்தியாவசிய செலவினங்களைத் தவிர மற்ற செலவுகளைக் குறைக்க மாநில அரசுகள் முயன்றுவருகின்றன.
இந்நிலையில், ஏப்ரல் மாதத்திற்கான கர்நாடக அரசின் வருவாய் பெருமளவு குறைந்துள்ளதால், அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படலாம் என்று மாநிலத்தின் உயர்மட்ட அலுவலர் ஒருவர் கூறியிருந்தார். இந்தச் செய்தி வேகமாகப் பரவியதால் அரசு ஊழியர்களிடையே அச்சம் ஏற்பட்டது.
இந்நிலையில் அரசு ஊழியர்களின் ஏப்ரல் மாத ஊதியம் எவ்வித பிடித்தமும் செய்யப்படமாட்டாது என்று கர்நாடக மாநிலத்தின் நிதியமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "இருப்பினும் மிகவும் அத்தியாவசிய செலவுகளைத் தவிர ஊதியம், ஓய்வூதியம், உணவுப் பாதுகாப்பு, நிர்வாகச் செலவுகள் உள்ளிட்டவற்றில் செலவுகளைக் குறைக்க திட்டமிட்டுள்ளோம்.
இதன்மூலம் சேமிக்கப்படும் நிதி அனைத்தும் கோவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்குத்தான் செலவிடப்படும். எனவே வரும் காலங்களில் இது குறித்து தேவையான முடிவுகள் எடுக்கப்படும்" என்று கர்நாடக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவின் நெற்களஞ்சியமாக தெலங்கானா மாறும் - கேசிஆர் நம்பிக்கை