இந்தியா - சீனா எல்லை மோதல் இரு நாடுகளிலும் அசாதாரணமான சூழ்நிலையை ஏற்படுத்தியது. சீனாவிற்கு எதிராக பல போராட்டங்களும், சீன பொருள்களை உடைத்தும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, முதற்கட்டமாக நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடும் என்ற காரணத்திற்காக டிக்டாக், ஷேர்இட் உள்பட் சீனாவின் 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.
இந்த அதிரடி முடிவு இந்திய மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. பல முன்னணி நாடுகளின் அலுவலர்களும் இந்த முடிவை வரவேற்பதாக கருத்து தெரிவித்தனர். இச்செயலிகளுக்கு அதிகாரப்பூர்வமாக தடை விதித்தாலும், செயல்பாட்டில் இருப்பதாக மத்திய அரசுக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. டிக்டாக் செயலியை துருக்கி மொழிக்கு மாற்றி மக்கள் உபயோகிக்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பரவி வந்தது.