மாநிலங்களின் ஒன்றியமாக இந்தியா செழித்து வளரும் என்கிறது இந்திய அரசியலமைப்பின் முதல் அட்டவணை. ஜனநாயகத்தின் அடித்தளம் நன்கு திட்டமிடப்பட்ட கட்டமைப்புடன் இருக்குமேயானால் நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் சிறந்து விளங்கும் என்று அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்கள் கருதினார்கள். ஆனால் இன்றைய யதார்த்தமோ அதற்கு முற்றிலும் வேறானதாக இருக்கிறது. ’நான்தான் அரசாங்கம்’ என்று டெல்லியின் துணைநிலை ஆளுநர் துணிச்சலுடன் கூறியிருப்பது இந்திய மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களின் ஆளுநர்களைச் சுற்றி சமீபகாலமாக எழுந்துள்ள சர்ச்சைகள் இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கின்றன. மத்திய அரசு இயற்றும் சட்டங்களை ஆதரிக்க வேண்டியது தனது கடமை என்று கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கூறுதுவது வியப்பை ஏற்படுத்துகிறது. தான் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்ப் ஆளுநர் இல்லை என்றும் அவர் கூறுகிறார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தன்னிடம் ஆலோசிக்காமல் உச்ச நீதிமன்றத்தை நாடியது தொடர்பாக கேரள அரசு அறிக்கை அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியது அம்மாநில அரசியலில் சூட்டைக் கிளப்பியுள்ளது. கேரளாவைப் போலவே மேற்கு வங்கத்தின் நிலைமையும் அவ்வாறே இருக்கிறது.
அம்மாநில ஆளுநரான ஜக்தீப் தங்கர், சர்ச்சைகளை ஏற்படுத்துபவராகவும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்பவராகவும் இருந்துவருகிறார். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் முடிவுகளை வெளிப்படையாக குறைகூறுகிறார் ஜக்தீப் தங்கர். இதன் காரணமாகவே, ‘பாஜகவின் கையாளாக இருக்கும் ஜக்தீப் தங்கரே வெளியேறு’ என ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் அவருக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில அரசு, அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு இயங்குகிறதா என்பதை கண்காணிப்பதைத் தாண்டி ஆளுநருக்கு அதிகாரங்கள் ஏதும் இல்லை. ஆளுநர்களுக்கான அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டவை. பெயரளவுக்குத்தான் ஆளுநர்களுக்கு அதிகாரம் உள்ளது. மாநிலத்தில் அரசியலமைப்பு நெருக்கடி ஏற்படும்போது மட்டுமே, ஆளுநர் அதிகாரத்துடன் தான் மேற்கொள்ள வேண்டிய கடமையைச் செய்ய வேண்டியவராகிறார்.
சர்ச்சைகளின் மையமாக கேரள, மேற்கு வங்க ஆளுநர்கள் மாறியிருப்பது அவர்கள் வரம்புகளை மீறி செயல்படுவதை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது. இவ்விரு மாநிலங்களைச் சேர்ந்த பாஜக அல்லாத அரசியல் கட்சிகள் தெரிவிக்கும் கருத்துக்கள் ஜனநாயகத்தை நேசிப்பவர்களின் எண்ணத்தையே பிரதிபலிக்கின்றன. ஆளுநர்களாக எத்தகையவர்களை நியமிக்க வேண்டும் என்பது தொடர்பாக ஜவஹர்லால் நேரு அரசியல் சாசன அவையில் பேசும்போது, "அரசியல் தலைவர்கள் தனிப்பட்ட லாபத்திற்காக அதிக அதிகாரங்களை விரும்புகிறார்கள். ஆனால் கல்வியாளர்களோ அல்லது பிற துறைகளில் உள்ள வல்லுநர்களோ, அரசாங்கத்துடன் முழுமையாக ஒத்துழைக்கிறார்கள்” எனக் குறிப்பிட்டார். லட்சியங்களுக்கு முக்கியத்துவமும் கெளரவமும் அதிகமாக இருந்த அந்த நாள்களிலேயே, ஆளுநர்கள் நியாயமற்ற அரசியலில் ஈடுபடுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தது காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு.
இத்தனைக்கும் அந்தக் கட்சி பல தசாப்தங்களாக மத்தியில் ஆட்சியிலிருந்தபோதும், ஆளுநர்கள் விஷயத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த காலத்தில், பிகார் சட்டப்பேரவைக் கலைத்ததில் பூட்டா சிங்கிற்கு இருந்த பங்கையும், மத்திய அமைச்சரவையின் அணுகுமுறையையும் உச்ச நீதிமன்றம் குறை கூறியது. ஆளுநர் பதவிக்கு மரியாதையை ஏற்படுத்தியவர்களாக ஜாகிர் உசேன், சரோஜினி நாயுடு, சுர்ஜித் சிங் பர்னாலா போன்றவர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களுடன் ஒப்பிடும்போது, ராம் லால், சிப்டே ராசி, பண்டாரி போன்ற மோசமான அரசியல்வாதி ஆளுநர்களின் எண்ணிக்கையே அதிகம்.