தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 27, 2020, 1:23 PM IST

ETV Bharat / bharat

'கட்டுப்பாடுகளைக் கடைப்பிடியுங்கள்' - கிரண்பேடி வேண்டுகோள்!

புதுச்சேரி: காய்கறி, மீன் சந்தைகளில் பொதுமக்கள் தகுந்த இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனத் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வேண்டுகோள்விடுத்துள்ளார்.

"கரோனா கட்டுப்பாடுகளை கடைபிடியுங்கள்" ஆளுநர் கிரண்பேடி வேண்டுகோள்!
"கரோனா கட்டுப்பாடுகளை கடைபிடியுங்கள்" ஆளுநர் கிரண்பேடி வேண்டுகோள்!

உலகளாவிய பெருந்தொற்று நோயான கோவிட்-19 இந்தியாவில் தீவிரமடைந்துவருகிறது. குறிப்பாக, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ஊரடங்கு தளர்வுக்குப் பின் தொற்று வேகமாகப் பரவிவருகிறது.

இதுவரை, அங்கு கோவிட்-19 தொற்றுநோயால் 621 பேர் பாதிக்கப்பட்டும், 10 பேர் உயிரிழந்தும் உள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கரோனா வைரஸ் (தீநுண்மி) பாதிப்பைக் கட்டுப்படுத்த புதுச்சேரி அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

யூனியன் பிரதேசம் முழுவதும் மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாகக் கூறி முகக்கவச தொழிற்சாலை ஒன்று மூடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வாட்ஸ்அப் மூலம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "பொதுமக்கள் தங்கள் அத்தியாவசிய பொருள்களை வாங்குவதற்கு வெளியே செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும்.

காய்கறி, மீன் சந்தைகளில் தகுந்த இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். தங்களுடைய கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதில் கடைக்காரர்களுக்கும் பங்கு உண்டு.

எனவே, வாடிக்கையாளர்களிடம் முகக்கவசம் அணியும்படியும், தகுந்த இடைவெளியைப் பின்பற்றும்படியும் சொல்ல வேண்டும். கூட்டம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் நோய்த்தொற்று பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

எனவே நாம் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு அருகில் யாரேனும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா என்று ஆரோக்யா செயலியின் வழியாகத் தெரியவரும். எனவே, அனைவரும் ஆரோக்யா சேது செயலியை தங்களுடைய செல்போன்களில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.

நம் அனைவருக்கும் கோவிட்-19 தொற்றுநோய் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. மற்றவர்களைப் பாதுகாக்க நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 கட்டுப்பாடுகளை மீறி புதுச்சேரியில் இயங்கிய முகக்கவச உற்பத்தி தொழிற்சாலையை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நேற்று மூட உத்தரவிட்டது கவனிக்கத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details