நாட்டின் குடிமக்களுக்கான அரசியல் சட்ட உத்தரவாதம் நெடுஞ்சாலைகளில் ரத்தம் சிந்திக்கொண்டிருப்பதை அன்மையில் வெளியான தேசிய குற்ற ஆவண காப்பகம் (என்.சி.ஆர்.பி.) வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. அறிக்கையின் புள்ளிவிவரப்படி, கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் சுமார் 4.37 லட்சம் சாலை விபத்துகள் நடைபெற்றுள்ளது. அதில், 1.55 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் என்பது மிகவும் வருந்ததத்தக்க செய்தியாகும்.
வேகமான பயணம் இறுதி பயணமாக அமைந்துவிடும், விரைந்து செல்கிறேன் என சொர்கத்திற்கு சென்றுவிடாதீர்கள் என பல்வேறு வாசகங்கள் அதிவேக பயணங்களை எச்சரிக்கும்விதமாக பொதுமக்களிடம் கூறப்படுகிறது.
இதை உறுதிப்படுத்தும் விதமாக, கடந்தாண்டு நிகழந்த விபத்துகளில் 60 விழுக்காடு என சுமார் 86 ஆயிரத்துக்கும் மேலான மரணங்கள் அதிவேக பயணத்தின் காரணமாகவே நிகழ்ந்துள்ளது என்.சி.ஆர்.பி. புள்ளி விவரம் தெரிவிக்கிறது. அத்துடன் கவனமற்ற பயணம் 42 ஆயிரத்து 557 உயிர்களை பலிவாங்கியுள்ளது. எனவே, 85 விழுக்காடு சாலையோர உயிரிழப்பு கவனமற்ற, அதிவேக பயணங்கள் காரணமாக நிகழந்துள்ளதாக இந்த புள்ளிவிவரம் மூலம் தெரிவந்துள்ளது.
நாட்டின் சாலை விபத்தால் உயிரிழப்பவர்களில் 65 விழுக்காட்டினர் 18-35 வயதை சேர்ந்தவர்கள் எனவும் இதன் காரணமாக இந்தியாவின் 3-5 விழுக்காடு ஜி.டி.பி. இழப்பை சந்திப்பதாகவும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கவலை தெரிவித்துள்ளார்.
எனவே, 2018ஆம் ஆண்டுக்குள் சாலை விபத்துகளை பாதியாக குறைக்க பல்வேறு கூறுகளில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற கருத்தரங்கில் கட்கரி தெரிவித்தார்.
இந்தப் பின்னணியில் மத்திய அரசு கொண்டுவந்த புதிய மோட்டார் வாகன சட்டம் நடைமுறைக்கு கொண்டுவருவதில் பெரும் இடர்களை சந்தித்துவருகிறது. அதிவேக பயணம், கவனக்குறைவு என குறுகிய நோக்கில் இந்த விவகாரத்தை அனுகி உண்மை நிலையை கவனிக்கமால் அரசு ஆண்டு தோறும் லட்சக்கணக்கான உயிர்களை இழந்துவருகிறது. இந்த மோசமான நிலையில் எத்தனை வருடங்கள் தொடரும், இதற்கு பொறுப்பேற்பது யார் என்ற கேள்விக்கு விடை இன்னும் கிடைத்தபாடில்லை.