எல்லைப் பிரச்னை காரணமாக இந்த முடிவை மத்திய அரசு எடுத்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், கடந்த சில நாள்களாகச் சீனச் செயலிகளால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி அந்நாட்டுச் செயலிகளைத் தடைசெய்ய உளவு அமைப்பு மத்திய அரசுக்குப் பரிந்துரைத்திருந்தது. அதன் விளைவாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் டிக்டாக் உள்ளிட்ட 59 சீனச் செயலிகளுக்குத் தடை - ஏன்?
20:46 June 29
டெல்லி: டிக்டாக், யூசி பிரவுசர் உள்ளிட்ட 59 சீனச் செயலிகளுக்கு தடை விதித்து இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம், தேசிய இணையப் பாதுகாப்பு நிறுவனத்தின் பரிந்துரையையடுத்து, வீடியோ கான்பரன்சிங் செயலியான ஜூம் செயலி பயன்படுத்துவது குறித்து உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இச்சூழலில் டிக்டாக், சேர்-இட், யூசி பிரவுசர், ஹலோ, யூ கேம் மேக்அப், கிளப் பேக்டரி, வீ சாட், கிளாஸ் ஆப் கிங்ஸ், வீ மேட், விவோ வீடியோ, கேம் ஸ்கேனர், ஹேகோ ப்ளே, கிளீன் மாஸ்டர் உள்ளிட்ட 59 சீனச் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் இறையாண்மை, பாதுகாப்பு, ஒருமைப்பாடு ஆகியவற்றிற்கு எதிராக மேற்குறிப்பிட்ட சீனச் செயலிகள் செயல்பட்டதால் தடைசெய்யப்படுகின்றன. பயனாளர்களின் தரவுகள், ரகசிய தகவல்களைத் தவறாகப் பயன்படுத்துவதாக புகார்கள் வந்ததையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 130 கோடி இந்தியர்களின் தனியுரிமையைப் பாதிக்கும் வண்ணம் இச்செயலிகள் செயல்பட்டுள்ளதால், இதுபோன்ற அவசர நடவடிக்கைகள் தேவையானதாக இருக்கின்றன. ஆகவே, இது கோடிக்கணக்கான இந்தியர்களின் நலனைப் பாதுகாக்கும் என்று நம்புகிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 15ஆம் தேதி இந்திய-சீன எல்லையான கிழக்கு லடாக்கிலுள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இரு ராணுவத்தினருக்கும் ஏற்பட்ட மோதலில் 20 வீரர்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தால் சீனாவுக்கு எதிரான மனநிலை இந்திய மக்களிடையே பரவலாக நிலவிவந்தது. அதன் எதிரொலியாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சீனப் பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது என்று போராட்டங்கள் நடைபெற்றன. புனேவிலுள்ள ஒரு கிராமம் சீனப் பொருள்களை நிராகரித்து தீர்மானம் நிறைவேற்றியிருந்தது கவனிக்கத்தக்கது.