இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்கு உதவியவர்களுக்கு மிக உயர்ந்த தேசிய விருது வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதன்படி சர்தார் வல்லபாய் படேல் நினைவாக, தேசிய ஒற்றுமை விருது வழங்கப்படும் எனவும்; பாரத ரத்னா விருதுக்கு இணையாக இந்த விருது கருதப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த விருது தொடங்கப்படுவதற்கான அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதில் சர்தார் பட்டேல் தேசிய ஒற்றுமை விருதில் பதக்கம் ஒன்றும் சான்றிதழும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஒருமைப்பாட்டு தினம், அதாவது சர்தார் பட்டேலின் பிறந்த தினமான அக்டோபர் 31ஆம் தேதி இந்த விருது அறிவிக்கப்படும். இந்த விருதுடன் பணப் பரிசுகள் இணைக்கப்படாது. ஒரு ஆண்டுக்கு 3 விருதுகளுக்கு மேல் வழங்கப்படாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.