ஹனி ட்ராப் வழக்கு
மத்தியப் பிரதேச மாநிலத்தை புரட்டிப்போட்டிருக்கும் வழக்கு ஹனி ட்ராப் (honey trap case). கல்லூரி, குடும்பப் பெண்களைக் குறிவைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கும்பல் ஒன்றை காவல் துறையினர் கடந்த மாதம் கைது செய்தனர். மொத்தம் ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலியல் தொடர்பான காணொலிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்தக் காணொலிகளில் காங்கிரஸ், பாரதிய ஜனதா உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், அரசு உயர் அலுவலர்கள், பிரபலங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. முதலமைச்சர் கமல்நாத் அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகித்துவரும் முக்கிய நபர் ஒருவரும் இந்த பாலியல் காணொலியில் இருக்கிறார். அவர் பதவி விலக வேண்டும் என பாரதிய ஜனதா போர்க்கொடி தூக்கியுள்ளது.
அமைச்சர் மீது புகார்
அவரை 'அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும்' என்று குரல்கள் எழுந்து வருகின்றன. இவர்களைத் தவிர சில முக்கிய அரசு அலுவலர்களும் காவல் துறையினரின் விசாரணை வளையத்துக்குள் சிக்கியுள்ளனர்.
இதற்கிடையில் ஹனி ட்ராப் வழக்கில் கைதாகியுள்ள பர்கா என்பவரின் கணவர் அமித் சோனி, இந்த வழக்குக்கும் பர்காவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று கூறினார்.தனது மனைவியை சிக்கவைக்க முயற்சிகள் நடப்பதாகப் புகார் தெரிவித்த அவர், நீதிமன்றத்தையே நம்பியிருப்பதாகவும் நீதி தம்மை கைவிடாது என்றும் கூறியுள்ளார்.
இந்த வழக்கில் பாலியல் தரகராக செயல்பட்ட இளைஞர் ஒருவரையும் காவல் துறையினர் ஏற்கனவே கைது செய்துள்ளனர். கல்லூரிப் பெண் ஒருவரை, அரசுப் பதவியில் முக்கிய பொறுப்பில் உள்ள பொறியாளர் ஒருவருக்கு விருந்தாக்கி அவரிடமிருந்து மூன்று கோடி ரூபாய் பறிக்கத் திட்டமிட்டபோது அந்த இளைஞர் சிக்கினார்.
இது தொடர்பான கூடுதல் தகவலுக்கு கிளிக் செய்யவும்:மத்தியப் பிரதேச பாலியல் வழக்கு சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றம்