கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு, பயணங்களுக்கு தடை, பள்ளிகளுக்கு விடுமுறை, முக்கிய நிகழ்வுகள் ரத்து போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அதில், தற்போது மிக முக்கியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சானிடைசர் (கிருமிநாசினி), மாஸ்க், கையுறை அவசியம் என அறிவித்துள்ளது.
இதையடுத்து, உற்பத்தி, தரம், முகவுறைகளின் விநியோகம், கை சுத்திகரிப்பான் குறித்த விழிப்புணர்வு ஆகியவற்றை ஒழுங்குபடுத்த சுகாதார மையங்களுக்கும், மாநிலங்களுக்கும் மத்திய அரசு அதிகாரம் அளித்துள்ளது. ஆனாலும், இவற்றின் விலை, அனைவருக்கும் கிடைக்கும் தன்மை என்பதெல்லாம்தான் இப்போதைய மிகப் பெரிய கேள்வி. இதற்கிடையில், அவர்களுக்கு கிருமிநாசினி, முகவுறைகள் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும்.
தேவையை பயன்படுத்தி கள்ள சந்தையில் மாஸ்க் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் விற்பதையும், அதன் இருப்பையும் கண்காணிக்க சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்துக்கு மத்திய அரசு அறிவுத்தியுள்ளது. இந்த பாதுகாப்பு உபகரணங்களின் விலையை எளிய மக்களும் வாங்கும் வகையில் நிர்ணயிக்கவும், கிடைக்கும் தன்மையை அதிகரிக்கவும் தேசிய பேரிடர் மேலாண்மை முகமைக்கு (NDMA) உத்தரவிடப்பட்டுள்ளது.