உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் 30 குழந்தைகள் உயிரிழந்ததற்கு காரணம் ஆக்ஸிஜன் பற்றாக்குறை என கூறிய மருத்துவர் கஃபீல் கான், சிறையிலிருந்து எழுதியதாக வெளியான நான்கு பக்க கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தக்கடிதத்தில் மதுரா சிறைச்சாலையில் உள்ள நரகச் சூழ்நிலையை அவர் விவரித்துள்ளார்.
ஆனால், இக்கடிதம் குறித்து கேள்வி எழுப்பிய மதுரா சிறைக் கண்காணிப்பாளர் சைலேந்திர மித்ரி, "சிறைக்கைதிகள் எழுதம் கடிதங்களை நாங்கள் பார்வையிட்டுதான் வெளியே அனுப்புவோம். அதுபோன்ற கடிதத்தை அவர் வைத்திருக்கவில்லை. கரோனா ஊரடங்கினால் பார்வையாளர்கள் யாரும் சிறைக்கு வராதபோது இந்தக்கடிதத்தை அவர் எழுதியிரு்கக வாய்ப்பில்லை" என அவர் தெரிவித்தார்.
மருத்துவர் கஃபீல் கான் தனது குடும்பத்துக்கு அந்தக் கடிதத்தை எழுதியுள்ளார். அக்கடிதத்தில், "இங்கு ஒரு கழிவறையை 150 பேர் பயன்படுத்துகிறார்கள். அவர்களுடைய வியர்வை, சிறுநீரின் துர்நாற்றம் அடிக்கிறது. மின்சாரத் தடையினால் ஏற்படும் தாங்கிக்கொள்ள முடியாத சூடு வாழ்க்கையை நரகமாக்கிறது. இங்குள்ள வாழ்க்கை நரகம்தான். சிறையில் நான் புத்தகம் வாசிக்க விரும்புகிறேன். ஆனால், அந்தக் கழிவறை துர்நாற்றத்தால் எண்ணால் வாசிக்கமுடியவில்லை. சில நேரம் தலைசுற்றல் வருகிறது. நான் இருக்கும் செல் முழுவதும் மீன் சந்தையில் இருக்கும் துர்நாற்றத்தைப் போல் வீசுகிறது" என எழுதியுள்ளார்.