17ஆவது மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இந்தியாவில் 18 மாநிலங்கள், இரண்டு யூனியன் பிரதேசங்களில் 91 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. அருணாச்சலப்பிரசேதம், ஆந்திரா, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலும் தற்போது ஒரேகட்டமாக நடைபெறுகிறது.
ஒடிசாவில் மட்டும் 28 தொகுதிகளுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் முதற்கட்டமாக நடைபெறுகிறது. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி நடைபெறுகிறது.
இன்று காலை 7மணிக்கு தொடங்கிய முதற்கட்ட வாக்குப்பதிவில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
முதற்கடட் வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகள் விவரம் இந்நிலையில், ஒவ்வொரு நாளின் சிறப்பையும் கூகுள் டூடுல் வெளியிடுவது வழக்கம். அந்தவகையில், இந்தியாவில் நடைபெறுகின்ற 17ஆவது மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டுள்ளது.
இதில் இந்திய மக்கள் வாக்குச்சாவடியில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்றும், வாக்களிப்பவர்கள் வாக்களிக்கச் செல்லும்போது என்னென்ன ஆதாரங்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும், (VVPAT) யாருக்கும் வாக்களித்தோம் என்பதை சரிபார்க்கும் கருவி மூலம் எவ்வாறு தெரிந்துகொள்வது முதலியவற்றையும் பதிவிட்டுள்ளது.