உலகில் பல்வேறு நாடுகளிலும் கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நாடுகளிலும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.
வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என்பதால் இந்தக் காலங்களில் பொதுமக்கள் அதிகமாக தங்கள் ஸ்மார்ட்போன்களிலும் கணினிகளிலும் கேம் விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில், பொதுமக்களைக் கவரும் வகையில் தனது கேமிங் சேவையான ஸ்டேடியா புரோவை 14 நாடுகளில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு இலவசமாக வழங்கவுள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் ஸ்டேடியா புரோவில் இணைவதன் மூலம் அடுத்த இரண்டு மாதங்களுக்கு இலவசமாக இந்தச் சேவையை பெறலாம். இதில் இணையும்போதே வாடிக்கையாளர்களுக்கு பத்து வீடியோ கேம்கள் இலவசமாக வழங்கப்படும். இதுதவிர மற்ற வீடியோ கேம்களையும் வாடிக்கையாளர்கள் தனியாக பணம் செலுத்தி வாங்கிக் கொள்ளலாம்.
ஏற்கனவே மாத சந்தா செலுத்துபவர்களுக்கு அடுத்த இரண்டு மாதங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கேமிங் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளதால் கேமிங் தரத்தை 4Kஇல் இருந்து 1080pக்கு குறைக்கவுள்ளதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:5ஜி சோதனையை வெற்றிகரமாக நடத்திய ஓப்போ