கூகுள் டூடுல்:இந்த தலைமுறையினரை ஆட்டிப் படைக்கும் கூகுளின் பிரத்யேகமான அம்சம் டூடுல். கூகுள் பக்கத்தினுள் சென்ற உடனே நெட்டிசன்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் வரலாற்று நிகழ்வுகளை நினைவுகூறும் தேதிகள், உலக பிரபலங்களின் முகங்கள் என பல்வேறு முக்கிய நிகழ்வுகளைக் குறிக்கும் வகையில் டூடுல்கள் இடம்பெற்றிருக்கும். கூகுள் நிறுவனத்தின் தொடக்கக் காலகட்டத்தில் விடுமுறை தினங்களை மட்டுமே குறிவைத்து டூடுல்கள் வடிவமைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
காமினி ராயின் பிறந்தநாளை கவுரவித்த கூகுள் நிறுவனம்
காமினி ராய்: இன்று கூகுள் நிறுவனம் இந்தியாவின் முதல் பெண் பட்டதாரியான காமினி ராயின் 155ஆவது பிறந்தநாளை கெளரவிக்கும் விதமாக டூடுல் வெளியிட்டுள்ளது.
யார் இந்த காமினி ராய்?
பிரபல வங்காள மொழி கவிஞரும், இந்தியாவின் முதல் பெண் பட்டதாரியுமான காமினி ராயின் 155ஆவது பிறந்தநாள் இன்று. 1964ஆம் ஆண்டு கிழக்கு வங்காளத்தில் பிறந்த இவரின் தந்தை நீதிபதியாக இருந்தவர். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் பள்ளிக்குச் சென்று, படிப்பைத் தொடர்ந்த முதல் பெண் குழந்தை காமினி ஆவார்.
பெண் கல்வி மறுக்கப்பட்டிருந்த அந்தக் காலத்தில் தன்னுடைய பெண் குழந்தைகளையும் படிக்க வைப்பதில் ஆர்வம் காட்டினார். இவர் பெண் உரிமைக்காக பாடுபட்டு பெண்ணியவாதியாக விளங்கினார். அதேபோல் பெண்களின் வாக்குரிமைக்காகவும் போராடினார். 1925ஆம் ஆண்டு பெண்களுக்கு ஓட்டுரிமை கிடைத்தது. பெண் தொழிலாளர் விசாரணை ஆணையத்தின் உறுப்பினராகவும் காமினி செயலாற்றியுள்ளார்.
சிறு வயதிலேயே இலக்கியத்தில் காமினிக்கு அதிக ஈடுபாடிருந்தது. தனது எட்டு வயதிலேயே கவிதைகள் எழுத ஆரம்பித்தார். மகா ஸ்வேதா, புண்டோரிக், பெளராணிகி, ஜீவன் பதே, மால்யா ஓ நிர்மால்யா போன்றவை இலக்கியப் படைப்புகளில் குறிப்பிடத்தக்கவையாகும்.
காமினி ராய் தனது கடைசிகாலத்தில் சில ஆண்டுகள் ஹசாரிபாக் என்ற சிறிய நகரத்தில் வாழ்ந்தார். அங்கு மகேஷ் சந்திர கோஷ், திரேந்திரநாத் செளத்ரி போன்ற அறிஞர்களுடன் இலக்கியம் மற்றும் பிற தலைப்புகளில் கலந்துரையாடுவதில் தனது நேரத்தைக் கழித்தார். செப்டம்பர் 27, 1933ஆம் ஆண்டு இவர் காலமானார். இப்படி பல பெருமைகளுக்குச் சொந்தக்காரரான காமினி ராயின் 155ஆவது பிறந்தநாளை கெளரவிக்கும் வகையில் அவரின் புகைப்படம் பொருந்திய அனிமேஷன் டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.