இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துவருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜாராத் ஆகிய மாநிலங்களில் இத்தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. அதேசமயம், கேரளா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் இந்த வைரஸ் பரவல் பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
அதிலும் குறிப்பாக ஒடிசாவில் இதுவரை 60 பேர் மட்டுமே கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார். 19 பேர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில், ஒடிசாவில் கடந்த 72 மணிநேரத்தில் கரோனாவால் யாரும் பாதிக்கப்படவில்லை என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது குறித்து அந்த அறிக்கையில், "நேற்று ஒருநாள் மட்டும் ஆயிரத்து 42 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், கரோனாவால் பாதிக்கப்பட்ட புபனேஷ்வரைச் சேர்ந்த இருவர் சிகிச்சை நிறைவடைந்து பூரண குணமடைந்துள்ளனர்.
இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மாநிலத்தில் 8 ஆயிரத்து 619 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் 8 ஆயிரத்து 559 பேருக்கு கரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளதாக" குறிப்பிடப்பட்டுள்ளது. கடைசியாக ஏப்ரல் 14ஆம் தேதி ஐந்து பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கரோனா வைரஸ் தீவரமடைந்துவரும் நிலையில், ஒடிசாவில் கடந்த 72 மணிநேரத்தில் எந்தவொரு பாதிப்பும் இல்லாதது பொதுமக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இதையும் படிங்க:இயல்பு நிலைக்கு திரும்பும் கேரளா?