உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவியேற்றுக்கொண்டார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பரிந்துரையின் பேரில் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நியமன உறுப்பினரான ரஞ்சன் கோகாய்க்கு மாநிலங்களவைத் தலைவரும், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
ரஞ்சன் கோகாய் பதவியேற்றுக் கொண்ட போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும்விதமாக முழக்கங்களை எழுப்பி வெளிநடப்பு மேற்கொண்டனர்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக 13 மாதங்கள் பதவி வகித்த ரஞ்சன் கோகாய் கடந்த நவம்பர் மாதம் பணியிலிருந்து ஓய்வுபெற்ற நிலையில், அடுத்த நான்கு மாதத்திற்குள் அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுத்தது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பதவி வகித்தபோது அயோத்தி வழக்கு, ரபேல் ஊழல் புகார் வழக்கு, சிபிஐ உள்மோதல் விவகாரம் ஆகிய முக்கிய வழக்குகளில் தீர்ப்பளித்தவர். இவர் மீது நீதிமன்ற பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்ததும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்த்து வழங்கவேண்டும் - தொல்.திருமாவளவன்