கோவா முதலமைச்சராக இருந்த மனோகர் பரிக்கர் புற்றுநோய் காரணமாக நேற்று முன்தினம் உயிரிழந்த நிலையில், நேற்று அரசு மரியாதையுடன் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து கோவா பாஜகவைச் சேர்ந்த பிரமோத் சாவந்த் புதிய முதலமைச்சராக இன்று மதியம் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் கூட்டணிக் கட்சியான கோவா முன்னணியைச் சேர்ந்த விஜய் சர்தேசாயும், மஹாராஷ்டிரவாடி கோமன்டக் கட்சி எம்எல்ஏ சுதின் தாவலிக்கார் ஆகியோரும் துணை முதலமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில் நாளை அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரியுள்ளதாக பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "எங்கள் பலத்தை நிரூபிக்க நம்பிக்கை புதன்கிழமை வாக்கெடுப்பு நடத்தக்கோரி ஆளுநர் மிருதுளா சின்ஹாவுக்கு கடிதம் எழுதியுள்ளோம். நாங்கள் அதற்குத் தயாராக உள்ளோம்" என, தெரிவித்துள்ளார்.