நாடாளுமன்றத்தில் மழைக்காலக் கூட்டத்தொடர் 8ஆவது நாளாக இன்று நடந்தது. அதில் மாநிலங்களை உறுப்பினர் ஜி.கே.வாசன் பேசுகையில், ''சமூகத்தில் உள்ள மனித கழிவுகளை மனிதனே அள்ளும் பிரச்னைக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இந்த முறைகள் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை ஊக்குவிப்பதோடு, ஒரே வகுப்பைச் சார்ந்தவர்களே இந்த வேலைகளை செய்ய பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு சரியான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாதது, அவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கிறது.
அதேபோல் மனித கழிவுகளை அள்ளும் குழிகளில் உள்ள விஷவாயு தாக்குதலாலும் மனிதர்களின் உயிர்களை இழக்கிறோம். நாம் வெளியில் முற்போக்காளர்களாக காட்டிக்கொள்கிறோம். ஆனால் மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் முறைக்கு இதுநாள் வரை முற்றுப்புள்ளி வைக்கத் தவறி வருகிறோம்.