கரோனா வைரஸ் தொற்றுநோயால் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் மாநிலங்களை மத்திய அரசு மீட்கவில்லை என்று குற்றம்சாட்டிய தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ், அதிகாரம் தாருங்கள் அல்லது உரிய நிதியை வழங்குங்கள் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
செவ்வாய்க்கிழமை நடந்த மாநில அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு இரவு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ் கூறியதாவது:-
“மத்திய அரசு தவறான கொள்கைகளைப் பின்பற்றுகிறது. இந்திய அரசாங்கத்தின் அணுகுமுறைக்காக நான் வருந்துகிறேன். இதை மத்திய அரசிடம் இருந்து நான் எதிர்பார்க்கவில்லை. இவ்வாறு தொடரும்பட்சத்தில், இதற்காக நாடு பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும். கரோனா வைரஸ் பரவலுக்கு முன்பே பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது.
இப்போது தொற்றுநோய் ஏற்படுத்திய தாக்கத்தினால் பொருளாதாரம் பெரும் அடியை சந்தித்துவருகிறது. தெலங்கானா அரசின் மாத வருவாய் ரூ.17 ஆயிரம் கோடியிலிருந்து ரூ. 1,600 கோடியாகக் குறைந்துள்ளது. வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது நான் பிரதமரிடம் தெளிவாகக் கூறினேன்.
அப்போது, “மையத்தில் ஒரு பரந்த நிதிக் கொள்கை உள்ளது. அதற்கு அதிகாரங்கள் உள்ளன. அதிகாரங்களை மாற்றுங்கள் அல்லது எங்களுக்குப் பணம் கொடுங்கள். ஆனால், உங்களிடம் பணம் இல்லை. ஆகவே, நீங்கள் அதைக் கொடுக்க முடியாது. எனவே உலகளாவிய கொள்கையை உருவாக்குங்கள் என நான் அவருக்கு எனது விருப்பத்தைத் தெரிவித்தேன்”.
ஆனால் இதுவரை எந்த பதிலும் இல்லை. எங்களிடம் கடன்கள் உள்ளன, நான் ஒத்திவைப்பு கேட்டேன், ஆனால் எந்த பதிலும் இல்லை. இது மத்திய அரசின் மீது என்ன சுமையை ஏற்படுத்தும் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இந்தக் கொள்கை என்ன என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. சிறிது காலம் காத்திருப்போம், எதுவும் நடக்கவில்லை என்றால் நான் வலுவான போராட்டத்தை நடத்துவேன்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்புவதற்காக ரயில் கட்டணம் செலுத்துமாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏழைகள், வேலையிழந்து வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அவர்களிடம் பணம் இல்லை. சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் திணறி வருகின்றனர். அவர்கள் எவ்வாறு ரயில் கட்டணம் செலுத்த முடியும்.
இது மிகவும் மோசமானது. ரயில் கட்டணங்களை செலுத்த மத்திய அரசிடம் பணம் இல்லையா? புலம்பெயர்ந்த தொழிலாளர்களை திருப்பி அனுப்புவதற்காக மாநிலத்திலிருந்து இயக்கப்படும் ரயில்வேக்கு தெலங்கானா அரசு முன்கூட்டியே ரூ.4 கோடி செலுத்தியுள்ளது. இதற்கிடையில் சிறப்பு ரயில்களுக்கு முன்பதிவுக் கட்டணமாக ரூ.30 வசூலிக்கப்படுகிறது.
கரோனா நெருக்கடி, ரயில்கள் இயங்கவில்லை. இந்த நேரத்திலா நீங்கள் முன்பதிவு கட்டணம் வசூலிக்க வேண்டும்? என்றும் சந்திரசேகர ராவ் கேள்வியெழுப்பினார்.
மேலும், மத்திய அரசின் மின்சார மசோதா குறித்த பதிலளித்த ராவ், “மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த மசோதா மாநிலத்தின் உரிமையைப் பறிக்கும் செயல். இதுகூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. இதில் எந்த சந்தேகமும் இல்லை” என்றார்.
இதையும் படிங்க: மருத்துவராக விரும்பி உயர் நீதிமன்ற நீதிபதியாக உயர்ந்த சாதனைப் பெண்!