குஜராத் மாநிலம், புஜ் பகுதியைச் சேர்ந்த ஷ்ரீ சஹாஜானந்த் மகளிர் கல்லூரி, சுவாமி நாராயண் கோயில் அறக்கட்டளையால் நடத்தப்பட்டுவருகிறது.
இங்கு படிக்கும் பெண்கள் தங்கள் மாதவிடாய் காலத்தைப் பொருட்படுத்தாமல், மத நெறிமுறைகளை மீறி, கல்லூரியிலுள்ள கோயிலுக்கு செல்வதாகவும், சக மாணவிகளை தொட்டுப் பழகுவதாகவும் அக்கல்லூரியின் விடுதிப் பொறுப்பாளர் ரமிலா பென், கல்லூரி முதல்வர் ரீடா ரனிங்காவிடம் புகார் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து இங்கு படித்துவந்த 68 மாணவிகள், கல்லூரி குளியலறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தனித்தனியே சோதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இதுகுறித்து கல்லூரி மாணவிகளிடம் விசாரித்தபோது, கல்லூரியின் விடுதிப் பொறுப்பாளர் ரமிலா பென், முதல்வரை அழைத்து தங்களைப் பற்றி புகார் தெரிவித்ததாகவும், தொடர்ந்து தாங்கள் உடனடியாக வகுப்புகளைவிட்டு வெளியேற்றப்பட்டு எவர் எவர் மாதவிடாய் காலத்தில் உள்ளனர் என தனித்தனியே சோதனைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், கல்லூரி முதல்வர் தங்களை தகாத வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்தியதாகவும் தெரிவித்தனர்.