நாட்டை உலுக்கும் கரோனா வைரசைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. குறிப்பாக, முகக்கவசம் அணிய வேண்டும், கிருமி நாசினி கொண்டு கைகளைச் சுத்தம் செய்ய வேண்டும், தகுந்த இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் போன்ற பல்வேறு அறிவுரைகள் மக்களுக்கு வழங்கி வருகின்றன. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிறப்பான சிகிச்சை அளித்து வருகின்றன.
அந்த வகையில், கரோனா அறிகுறிகளோடு இருப்பவர்களுக்கு 14 நாள்கள் தனிமைப்படுத்தல் மையத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் மக்கள் தவித்துக்கொண்டிருக்கும் சமயத்தில், உயிரை விட பொழுதுபோக்கு தான் முக்கியம் என்று நினைத்த பிகார் மக்கள் சிலர் தனிமைப்படுத்தல் மையத்திற்கு பெண்களை அழைத்துவந்து நடனமாட வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிகார் மாநிலம் சம்ஸ்திபூர் மாவட்டத்தில் காராகா கிராமத்தில் உள்ள கரோனா தனிமைப்படுத்தல் மையத்தில் அறிகுறிகள் இருப்போரை மாநில அரசு தங்க வைத்துள்ளது. அவர்களுக்குத் தேவையான சத்தான உணவுகளையும் அரசு அலுவலர்கள் முறையாக வழங்கி வருகின்றனர்.