மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரிலிருந்து புறப்பட்ட ராட்சத லாரி ஒன்று திருவனந்தபுரத்தில் உள்ள இந்தியாவின் முதன்மை ஆராய்ச்சி மையத்திற்கு வந்தடைந்துள்ளது. சராசரியாக ஆறு முதல் எட்டு நாள்களுக்குள் வரவேண்டிய லாரியானது சுமார் ஒரு வருடம் பயணித்து ஆமை வேகத்தில் வந்துள்ளது. அதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது லாரி சுமந்து வந்த விண்வெளி ஆட்டோக்ளேவ் கருவிதான். அந்த கருவியின் எடை மட்டுமே சுமார் 70 டன் இருக்கும் என கருதப்படுகிறது.
'மகாராஷ்டிரா டூ கேரளா...ஒரு வருட பயணம்' தினமும் 5 கி.மீ மட்டுமே சென்ற ராட்சத லாரியில் இருந்தது என்ன! - தினமும் 5 கி.மீ மட்டுமே சென்ற ராட்சத லாரி
திருவனந்தபுரம்: மகாராஷ்டிரா நாசிக்கிலிருந்து விண்வெளி ஆட்டோக்ளேவ் கருவியுடன் புறப்பட்ட ராட்சத லாரி ஒன்று, ஒரு வருடம் கழித்து திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திற்கு வந்தடைந்துள்ளது.

இதுகுறித்து ராட்சத லாரியில் பயணித்த ஊழியர் ஒருவர் கூறுகையில், "மகாராஷ்டிராவிலிருந்து 2019 ஜூலை 8ஆம் தேதி பயணத்தைத் தொடங்கினோம். நான்கு மாநிலங்கள் வழியாக சுமார் ஒரு வருடமாக நீடித்த எங்கள் பயணத்தின் முடிவான திருவனந்தபுரத்தை அடைந்துவிட்டோம். விக்ரம் சரபாய் விண்வெளி மையத்தில் (Vikram Sarabhai Space Centre) கொண்டு வந்த சரக்குகளை வழங்குவிடுவோம்" என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், "தினந்தோறும் 5 கிமீ மட்டுமே பயணம் செய்வோம். லாரியில் மொத்தம் 32 ஊழியர்கள் இருந்தனர். நாங்கள் கொண்டு வந்த இயந்திரம் 7.5 மீட்டர் உயரமும், 7 மீட்டர் அகலமும் கொண்டவை. அதன் மொத்த எடை சுமார் 70 டன் ஆகும். சரக்குகளின் எடையைச் சுமக்க கயிறுகளைப் பயன்படுத்தினோம். எங்கள் வாகனம் பயணித்த வழிகளில் தகுந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கரோனாவால் சிறிது கால தாமதம் ஏற்பட்டிருந்தாலும், வெற்றிகரமாக பயணத்தை முடித்து விட்டோம்" என்றார்.