தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உ.பி. காவல்துறையினருக்கு ராஜஸ்தான் முதலமைச்சர் கடும் கண்டனம்! - ஹத்ராஸ் செய்திகள்

ஜெய்ப்பூர் : ஹத்ராஸ் இளம்பெண்ணின் இறுதி நிகழ்வில் அவரது பெற்றோரைக் கூட அனுமதிக்காமல் எரியூட்டிய உத்தரப் பிரதேச காவல்துறைக்கு ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உ.பி., காவல்துறையினருக்கு ராஜஸ்தான் முதலமைச்சர் கடும் கண்டனம்!
உ.பி., காவல்துறையினருக்கு ராஜஸ்தான் முதலமைச்சர் கடும் கண்டனம்!

By

Published : Oct 5, 2020, 2:50 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டியலின பெண் (19) ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த நான்கு உயர் சாதி ஆண்களால் கடந்த 14ஆம் தேதியன்று கும்பல் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டார். முதுகெலும்பு உடைக்கப்பட்டு, நாக்கு வெட்டப்பட்டு பலத்த காயங்களோடு டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவந்த அந்த இளம்பெண் கடந்த செப்.30ஆம் தேதி உயிரிழந்தார்.

அவருக்கு நீதி கேட்டு, நாடு முழுவதும் பெரும் போராட்டம் வெடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர உயிரிழந்த பெண்ணின் உடலை நள்ளிரவிலேயே காவல் துறையினர் எரியூட்டினர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், " பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த ஹத்ராஸ் இளம் பெண்ணின் உடலை அவரது பெற்றோரிடம் இருந்து கையகப்படுத்தி, நள்ளிரவில் காவல்துறையினர் எரியூட்டியது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.

இந்த சம்பவம் மனசாட்சி உள்ள அனைவரையும் கொதிப்படைய வைத்துள்ளது.

இறந்த தனது மகளை இறுதியாக பார்ப்பதற்கு கூட அவரது தாயாருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எவ்வளவு கொடுமையானது. பாஜகவின் ஆட்சியில் இவை அனைத்தும் நடந்துள்ளது.

கோவிட்-19 பாதிப்பு காலத்தில் கூட, ஒரு உயிரிழந்தால் 20 பேர் வரை அந்த இறுதி நிகழ்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

உடல் முதலில் குடும்ப உறுப்பினரிடம் ஒப்படைக்கப்படும். பின்னர், அவர்களது மத நம்பிக்கையின்படி சடங்குகள் நடத்தப்பட்டே தகனம் நடைபெற்றது.

அத்தகைய மரியாதை கொடுப்பது நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும். நாட்டின் மத நம்பிக்கையும் ஆகும்.

ஆனால், ஹத்ராஸ் பெண்ணின் நிகழ்வில் இவை கடைபிடிக்கப்பட்டதா? இந்து பண்பாட்டைப் பற்றி பேச பாஜகவுக்கு என்ன தகுதி இருக்கிறது" என கேள்வியெழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய பாஜக மாநிலத் தலைவர் பூனியா, "ராஜஸ்தான் மாநிலம் நாட்டின் 'குற்றத் தலைநகராக' மாறியுள்ளது. மாநிலம் மோசமடைந்து வருகிறது. அதிகரித்து வரும் குற்றங்கள் ஆளும் காங்கிரஸ் அரசின் நிர்வாக திறன் இன்மையைக் காட்டுகிறது.

மாநிலத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள், பெண்கள் மற்றும் தலித் மீதான அட்டூழியங்களை கண்டித்து இன்று மாலை அனைத்து மாவட்ட தலைமையகங்களிலும் பாஜக தர்ணா மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தும். ராஜஸ்தான் அரசு இதுபோன்ற குற்ற சம்பவங்கள் தடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அரசு முன்வர வேண்டும்" என கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details