விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற வாயு கசிவு விபத்து குறித்து விளக்கமளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியில் இது போன்ற தொழிற்சாலைக்கு எப்படி அனுமதி அளிக்கப்பட்டது என்றும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
விசாகப்பட்டினம் வாயு கசிவு: தகவல்கள் உடனுக்குடன்
16:05 May 07
15:40 May 07
வாயு கசிந்து ஏற்பட்ட இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்று ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். இதுதவிர முதன்மை மருத்துவ செலவுகளுக்கு 25 ஆயிரம் ரூபாயும் வென்டிலேட்டர் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு மருத்துவச் செலவுக்காக 10 லட்ச ரூபாயும் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுதவிர வாயு கசிவு ஏற்பட்டுள்ள இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 15 ஆயிரம் பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
15:27 May 07
விசாகபட்டினத்தில் ஏற்பட்டுள்ள விபத்தில் மீட்புப்பணிகளும் மருத்துவச் சிகிச்சைகளும் எவ்வாறு நடைபெற்றுவருகிரது என்பது குறித்து விளக்கமளிக்க ஆந்திரப் பிரதேச மாநில தலைமைச் செயலருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதேபோல, விபத்து குறித்து நடைபெறும் விசாரணை தகவல்களை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்குமாறு ஆந்திரப் பிரதேச டிஜிபிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
15:19 May 07
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற விபத்தில் தற்போது வரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
15:13 May 07
மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்றுவருபவர்களை ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி நேரில் சந்தித்தார்.
14:35 May 07
"வாயு பரவல் தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. வாயு பரவலை 4-tert-Butylcatechol என்ற ரசாயனத்தைக் கொண்டு கட்டுப்படுத்த முயல்கிறோம். வாயு பரவுவது தற்போது குறைந்துள்ளது. இருப்பினும் அது முற்றிலும் நின்றுபோகவில்லை. காற்றின் வேகத்தைப்பொறுத்தே வாயு எவ்வளவு தூரம் பரவும் என்பதைக் கணிக்கமுடியும்" என்று மீட்புப் பணியில் ஈடுபட்ட அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
14:19 May 07
ஆந்திர டிஜிபி தாமோதர் கவுதம் சவாங் கூறுகையில், "நிலைமை தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. வாயு கசிவைக் கட்டுப்படுத்த நிறைய தண்ணீர் தேவைப்படுகிறது. தற்போது வரை 800க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலருக்கு சிகிச்சை நிறைவடைந்துவிட்டது.
இந்த விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும். தடயவியல் குழுக்களும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன" என்றார்.
14:04 May 07
பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க அவர்கள் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனைக்கு ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி விரைந்துள்ளார்.
13:58 May 07
விஷ வாயு விபத்து காரணமாக உயிரிழந்தவர்களின் தகவல்களை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இதுவரை எட்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதில் ஒருவர் யார் என்பது குறித்து இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், மருத்துவமனைக்கு அழைத்துவரும் முன்பே அவர்கள் உயிரிழந்துவிட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13:42 May 07
விபத்து குறித்து ஆந்திர அமைச்சர் எம் ஜி ரெட்டி கூறுகையில், "இந்த விபத்தினால் ஏற்படும் நீண்ட கால பாதிப்புகள் குறித்து ஆராய்ந்துவருகிறோம். இந்த விபத்திற்குச் சம்பந்தப்பட்ட நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும். விபத்து குறித்து அவர்கள் விளக்கமளிக்க வேண்டும்.
பாதுகாப்பு நெறிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று கூறியுள்ளார்.
13:00 May 07
ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வாயு கசிவு விபத்து குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் எரிவாயு கசிவு காரணமாக சுமார் 2 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், பொதுமக்களின் உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதவிர கால்நடை மருத்துவர்களையும் விசாகப்பட்டினத்திற்கு அனுப்புமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
12:46 May 07
ஆந்திரப் பிரதேச முதலமைச்சரின் ட்விட்டர் பக்கத்தில், "பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க அவர்கள் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனைக்கு முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி செல்லவுள்ளார்.
முதலமைச்சர் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்துவருகிறார். பொதுமக்களைக் காப்பாற்றவும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மாவட்ட அலுவலர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
12:39 May 07
விசாகப்பட்டினம் வாயு கசிவு விபத்தைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரும பங்கேற்றனர்.
12:23 May 07
ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "விசாகப்பட்டின் விபத்து எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு காங்கிரஸ் தொண்டர்களிடமும் தலைவர்களிடமும் கேட்டுக்கொள்கிறேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் விரைவாகக் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
12:17 May 07
விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளது.
12:05 May 07
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ட்விட்டரில், "விசாகப்பட்டினம் அருகேயுள்ள ஒரு ஆலையில் வாயு கசிந்து ஏற்பட்ட விபத்தில் பலர் உயிரிழந்துள்ளதாக வெளியான தகவல்கள் வருத்தமளிக்கின்றன. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் நான் பிரார்த்தனை மேற்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
11:59 May 07
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைத்தைச் சேர்ந்த 27 வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். தற்போது வரை 80 முதல் 90 விழுக்காடு மக்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்றியுள்ளதாகத் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் டிஜிபி எஸ்.என். பிரதான் தெரிவித்துள்ளார்.
11:52 May 07
உள் துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், "விசாகபட்டினம் சம்பவம் கவலை அளிக்கிறது. தேசிய பேரிடர் மேலாண்மை அலுவலர்களுடனும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுடனும் பேசியுள்ளேன். நிலைமையை தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்துவருகிறோம். விசாகப்பட்டின மக்களின் நல்வாழ்வுக்காகப் பிரார்த்திக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
11:43 May 07
வாயு கசிந்து விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் வாழும் மக்களுக்குத் தொண்டை எரிச்சல், தோல் எரிச்சல் கடுமையாக ஏற்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் டிஜிபி எஸ்.என். பிரதான் கூறுகையில், "தற்போது வரை ஆயிரம் முதல் 1500 பேரை இப்பகுதியிலிருந்து வெளியேற்றியுள்ளோம். அவர்களில் 800க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.
11:32 May 07
விசாகபட்டினம் வாயு கசிவு விபத்தைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தைக் கூட்டியுள்ளதாகப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
11:27 May 07
பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்த விபத்துத் தொடர்பாக உள் துறை அமைச்சகத்திடமும் தேசிய பேரிடர் மேலாண்மை அலுவலர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டேன். நிலைமை அவர்கள் தொடர்ந்து கண்காணித்துவருகின்றனர். விசாகபட்டினத்திலுள்ள மக்கள் பத்திரமாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்துகொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
10:22 May 07
விசாகபட்டிணம் அருகேவுள்ள கோபாலப்பட்டினம் ஆர்.ஜி.வெங்கடபுரம் கிராமத்தில் இயங்கிவரும் எல்ஜி பாலிமர்ஸ் தொழிற்சாலையிலிருந்து 'பாலி வினைல் குளோரைடு' என்ற அபாயகரமான வாயு திடீரென கசிந்ததில் பெரும் ரசாயன விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தொழிற்சாலையிலிருந்து கசிந்த அபாயகரமான ரசாயன வாயு சுமார் 3 கி.மீ. சுற்றளவிற்கு பரவியுள்ளது. உயிர் குடிக்கும் இந்த வேதிப்பொருளை சுவாசித்த அப்பகுதி பொதுமக்களுக்கு கண்கள், தோல் ஆகியவற்றில் எரிச்சல் ஏற்பட்டதுடன் பலர் மயக்கமடைந்துள்ளனர். இந்த வாயுவைச் சுவாசித்ததில் தற்போது வரை ஒரு குழந்தை உட்பட எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
TAGGED:
விசாகபட்டிணம் வாயு கசிவு