சில நாள்களுக்கு முன்னதாக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் உள்பட 8 காவலர்கள் ரவுடிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பிரபல ரவுடி விகாஸ் துபே, இன்று காவல் துறையினரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளார்.
இதைப்பற்றி காவல் துறையினர் கூறுகையில், 'விகாஸ் துபேவை விசாரணைக்காக அழைத்து வந்த வாகனம் மழையின் காரணமாக விபத்தில் சிக்கியது. இதனைப் பயன்படுத்தி அவர் எங்களிடம் இருந்து தப்பிக்க முயன்றார். அதனால் என்கவுன்ட்டர் செய்தோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த விகாஸ் துபே?
உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூரில் உள்ள பிக்ரு என்ற கிராமம் தான், விகாஸ் துபேவுக்கு சொந்த ஊர்.
2001ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக அமைச்சர் சந்தோஷ் சுக்லாவை துரத்திச் சென்று, காவல் நிலையத்தின் உள்ளேயே வைத்து விகாஸ் துபே படுகொலை செய்தார். இவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட பின், 6 மாதங்களுக்குப் பிறகு சரணடைந்தார். அந்த வழக்கில் அமைச்சரின் கன் மேன் (Gun Man), பாதுகாப்பு அலுவலர்கள் ஆகியோர் விகாஸ் துபேவுக்கு ஆதரவாக சாட்சியளிக்க, நான்கு ஆண்டுகளில் துபே வழக்கிலிருந்து வெளிவந்தார்.
அதற்கு முன்னதாக 1999ஆம் ஆண்டு, தனது சொந்தக் கிராமத்தில் ஜுன்னா பாபா என்பவரைக் கொலை செய்து, அவரது நிலம் மற்றும் சொத்துக்களை தனதாக்கிக் கொண்டார், விகாஸ்.
2000ஆம் ஆண்டில் தனது தாரா சந்த் நடுநிலை கல்லூரியில் ஆசிரியர் மற்றும் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ஆகியோரைக் கொலை செய்த குற்றத்திற்காக, சில முறை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
முன்னதாக, பல குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டிருந்தாலும் அமைச்சரை கொலை செய்ததன் மூலம் இவருக்கு சில அரசியல்வாதிகளின் ஆதரவு கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து கேபிள் ஆபரேட்டர் தினேஷ் துபே என்பவரை பணத் தகராறில் கொலை செய்த குற்றத்திற்காக விகாஸ் துபே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர் 2006ஆம் ஆண்டு கொடுத்த நேர்காணலில், இவர் ஜில்லா பஞ்சாயத்து உறுப்பினராகவும், இவரது தம்பி பீத்தி கிராமத் தலைவராகவும் இருந்துள்ளனர் என்பது தெரியவருகிறது.
கிட்டத்தட்ட கடந்த 30 ஆண்டுகளில் இவர் மீது 5 கொலை வழக்குகள், 8 கொலை முயற்சி வழக்குகள் என மொத்தமாக 62 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர் மீது உத்தரப் பிரதேச காவல் துறை சார்பாக குண்டாஸ் வழக்கு, தேசிய பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு என ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் இருந்துள்ளன.
அதேபோல் லக்னோவில் ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்கும், ஷஹாரன்பூரில் போதைப் பிரிவின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஷஹாரன்பூர் வழக்கில் இருந்து இவர் ஏற்கெனவே விடுவிக்கப்பட்ட நிலையில், லக்னோவில் பதிவு செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.
பிரபல ரவுடி விகாஸ் துபே காவல் துறையினரால் சுட்டுக்கொலை விகாஸ் துபே மீது அடிதடி குற்றத்திற்காக 1990ஆம் ஆண்டு முதன்முதலாக கான்பூர் தெஹாத்தின் சிவ்லி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து 1992ஆம் ஆண்டு பட்டியலின இளைஞர் ஒருவரைக் கொலை செய்ததற்காக, இரண்டாவது முறையாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த இரு வழக்குகளில் இருந்தும் விகாஸ் துபே விடுவிக்கப்பட்டார்.
சில ஆண்டுகளாக தீவிரமாக தேடப்பட்டு வந்த குற்றவாளியான விகாஸ் துபேவைப் பிடிக்க , ஜூலை 2ஆம் தேதி இரவு செளபேபூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த 8 காவலர்கள் பிக்ரு கிராமத்திற்குச் சென்றனர். ஆனால், காவல் துறையினர் தன்னைக் கைது செய்ய வருவதை அறிந்த விகாஸ் துபே, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து 8 காவலர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தார். இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட 35 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
விகாஸ் துபே தலைமறைவாகிய நிலையில், அவரைப் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.50 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என காவல் துறை சார்பாக அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து விகாஸ் துபேவுடன் தொடர்பில் இருந்த ஒரு உதவி ஆய்வாளர், 3 காவலர்கள் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் சௌபேபூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய எட்டு காவலர்கள் அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
நேற்று முன்தினம்(ஜூலை 8) விகாஸ் துபேவின் கூட்டாளிகளின் புகைப்படம் காவல் துறையினரால் வெளியிடப்பட்டது.
ஜூலை 7ஆம் தேதி விகாஸ் துபேயின் முக்கியக் கூட்டாளியான அமர் துபேவை காவல் துறையினர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை செய்தனர்.
நேற்று (ஜூலை 9) மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் காவல் துறையினர் விகாஸ் துபேவை கோயிலில் வைத்து கைது செய்தனர்.
வழிப்பறியில் தொடங்கிய விகாஸ் துபேவின் வாழ்க்கை சிறிது சிறிதாக கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, நிலப்பறிப்பு, கொலைகள், அரசியல், அரசியல் கொலைகள் என 30 ஆண்டுகள் தொடர்ந்து என்கவுன்ட்டரில் முடிவடைந்துள்ளது.