கொலை முயற்சி, போராட்டத்தில் கலவரம் ஏற்படுத்தியது, பண மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட பல குற்றப் பிரிவுகளில் கேங்ஸ்டர் எஜாஸ் லக்டவாலாவை மும்பை காவல் துறையினர் வலைவீசி தேடிவந்தனர். இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள சத்ரபதி சிவாஜி சர்வதே விமான நிலையத்தில் வைத்து மும்பை குற்றப் பிரிவு காவல் துறையினர் எஜாஸ் லக்டவாலாவை நேற்று கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், கனடா, மலேசியா, அமெரிக்கா, லண்டன், நேபாளம் ஆகிய நாடுகளில் அவர் தலைமறைவாகியிருந்தது தெரியவந்தது. மேலும் அவரிடமிருந்த போலி கடவுச்சீட்டுகளையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
எஜாஸ் கேங்ஸ்டராகி தனக்கென ஒரு கூட்டத்தை தொடங்குவதற்கு முன்பு, அவர் நிழலுலக தாதாவான தாவூத் இப்ராஹிமிடம் தன்னை இணைத்துக் கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்துள்ளார்.
2004ஆம் ஆண்டு கனடா நாட்டு காவல் துறையினர் எஜாஸை ஒட்டாவாவில் வைத்து கைதுசெய்தனர். அங்கிருந்த சிறையிலிருந்து தப்பித்த அவர், சில காலம் வட அமெரிக்காவில் பதுங்கியிருந்ததாகக் கூறப்பட்டது. சர்வதேச அளவில் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டு சர்வதேச காவல் துறையினர் எஜாஸை தேடிவந்தனர்.
இதற்கிடையே, எஜாஸை கைதுசெய்ய மத்திய அரசும் தீவிரம்காட்டிவந்தது. அதன்படி அவர் மகள் ஷிஃபா ஷேக்கை பின்தொடர்ந்த மும்பை காவல் துறையினர், விமான நிலையத்தில் போலி கடவுச்சீட்டு மூலம் நேபாளம் செல்ல முயன்ற குற்றத்தில் அவரை கைதுசெய்தனர்.
அதனைத் தொடர்ந்து அவர் அளித்த தகவலின் அடிப்படையில், எஜாஸ் லக்தவாலாவை மும்பை குற்றப் பரிவு காவல் துறையினர் நோட்டமிட்டு வந்தனர். பின்னர், திட்டம் தீட்டி நேற்று அவரை கைதுசெய்துள்ளனர்.
இதையும் படியுங்க: நிர்பயா குற்றவாளியின் கடைசி நிவாரண மனு