உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டியலின இளம்பெண் (19) ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த நான்கு ஆதிக்கச் சாதி ஆண்களால் செப்டம்பர் 14ஆம் தேதி காட்டுப்பகுதியில் கும்பல் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார்.
முதுகெலும்பு உடைந்து, நாக்கு வெட்டப்பட்டு பலத்த காயங்களோடு அம்மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர், சிகிச்சைக்காக அலிகார் நகரில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
தொடர்ந்து நாளுக்கு நாள் உடல் நிலை மோசமடைந்தை அடுத்து, கடைசியாக டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட பெண்ணிடம் செப்டம்பர் 23 அன்று காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், சந்தீப், ராமு, லாவ்குஷ், ரவி ஆகிய நால்வர்தான் இந்தக் குற்றத்தைப் புரிந்தது உறுதிசெய்யப்பட்டது.