சர்வ விக்னஹாரம் தேவம் சர்வ விக்னா விவர்ஜிதம்...
சர்வசித்தி பிரதாதரம் வந்தேஹம் கணநாயகம்...
இவ்வுகில், அண்ட படைப்பாளராகவும், மூன்று உலகங்களின் தலைவராகவும் விநாயக பெருமான் விளங்குகிறார். அவரின் புனித தலம், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள காணிபாக்கம் என்ற பகுதியில் அமைந்துள்ளது.
காணி என்றால் ஒரு ஏக்கர் நிலம் என்றும், பர்க்காரம் என்றால் ஈரப்பதம் என்றும் பொருள். அந்த வகையில் கானிபாக்கம் ஸ்ரீ வரசித்தி சுயம்பு விநாயக பெருமான் கோயில் கருணையின் சின்னமாக, உண்மையின் ஊற்றாக பார்க்கப்படுகிறது.
இங்குள்ள மக்கள் இவரை ஸ்ரீ வரசித்தி விநாயகுடு என்று அழைக்கின்றனர். பகுதா ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்தக் கோயிலின் மற்றுமொரு சிறப்பு என்னவென்றால், மதத்தை கடந்து பிற மத மக்களும் கூட இங்கு வந்து வழிபாடு நடத்துவதை பார்க்கலாம். இதுமட்டுமின்றி சுற்றுலாப் பயணிகளையும் இங்கு காணலாம்.
கோயிலின் வரலாறு:
இந்தக் கோயில் ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என்பதற்கு வரலாற்று சான்றுகள் உள்ளன. முன்னொரு காலத்தில் இந்தப் பகுதி விஹார்புரி என்று அழைக்கப்பெற்றுள்ளது. இங்கு திறமையான மூன்று சகோதரர்கள் வசித்துவந்தனர். பிறவியிலேயே இவர்களுக்கு கண் பார்வை கிடையாது, வாய் பேச முடியாது, காதும் கேட்காது.
ஆனாலும் இந்த மூவரும் உண்மையாகவும், இறைவன் மீது தூய்மையான பக்தி கொண்டவர்களாகவும் வாழ்ந்து வந்தனர். ஒரு கட்டத்தில் இவர்களின் விவசாய நிலம் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டது. குடிக்க கூட தண்ணீர் இல்லாத நிலை.
இதனால் தோட்டத்தில் கிணறு ஒன்றை தோண்டினார்கள். அப்போது பெரும்பாறை ஒன்று தட்டுப்பட்டது. அந்தப் பாறையிலிருந்து ரத்தம் வழிந்தோடியது. இதை தொட்ட மூவரின் குறைகளும், ஆதவனை கண்ட பனி போல் அகன்றன. இந்த விசித்திரமான சூழல், அந்தப் பகுதியை சேர்ந்த கிராமவாசிகளின் காதுகளுக்கு எட்டியது.
அதன்பின்னர் கிணற்றை மேலும் ஆழமாக தோண்டியபோது அங்கு விநாயகர் சுயம்பு வடிவில் காட்சியளித்தார். கிராம மக்கள் அவரை பக்தியுடன் வணங்கினார்கள். அந்தப் பகுதியில் கிடைத்த தேங்காய், பழங்களை கொண்டுவந்து விநாயகருக்கு படைத்து வணங்கினார்கள். அந்தப் பகுதியில் நிலவிய கடும் வறட்சியும் நீங்கியது.
இதனால் அந்த விநாயகரை காணி பர்க்காரம் என்றே மக்கள் அழைத்தனர். ஆம்.. காணி என்றால் ஒரு ஏக்கர் நிலத்தையும் பர்க்காரம் என்றால் ஈரப்பதத்தையும் குறிக்கும். பின்னாள்களில் பர்க்காரம் என்ற சொல் பாக்கம் என்று மருவியதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கோயிலின் சிறப்புகள்:
காணிபாக்கம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயில் உண்மையின் சாட்சியாக விளங்குகிறார். ஆகவே இங்கு பொய் சத்தியம் செய்தால் நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்று பக்தர்கள் உறுதியாக நம்புகின்றனர்.
மேலும் இந்த இறைவன் முன்பு சத்தியம் செய்தால் குடிபழக்கம் உள்ளிட்ட தீய பழக்க வழக்கங்களிலிருந்தும் விடுபடலாம் என்பதும் இம்மக்களின் ஆழ்ந்த நம்பிக்கை.
மேலும் இங்குள்ள வரசித்தி விநாயகர் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்கிறார். ஆம்.. 1945ஆம் ஆண்டு விஜயவாடாவை சேர்ந்த பக்தர் ஒருவர் இங்குள்ள விநாயகருக்கு வெள்ளியிலான ஆபரணத்தை செய்து கொடுத்தார். சில ஆண்டுகள் கழிந்த நிலையில், இந்த ஆபரணம் விநாயகருக்கு பொருந்தவில்லை.
தொடர்ச்சியாக 2000ஆவது ஆண்டில் செய்யப்பட்ட ஆபரணத்துக்கும் சில ஆண்டுகள் கழித்து இதே நிலைமை ஏற்பட்டது. மறுபுறம் காணிபாக்கம் கோயிலில் சிவன்- விஷ்ணு புராதன சம்பிரதாயங்களும் நடக்கின்றன. மகா கணபதி, தெக்ஷிணா மூர்த்தி, சூரிய பகவான், முருகப்பெருமான், துர்கா தேவி, நந்திகேஸ்வரரர் உள்ளிட்ட சிலைகளும் அருகருகே செதுக்கப்பட்டுள்ளன.
பக்தர்கள் இங்கும் சிறப்பு பூஜைகள் நடத்துகின்றனர். மேலும் சர்வ தோஷ நிவர்த்தி, ராகு-கேது பூஜைகளும் நடத்தப்படுகின்றன. இங்கு நடைபெறும் 21 நாள்கள் பிரம்மோற்சவம் பிரமாண்டமாக இருக்கும்.
காணிபாக்கம் சுயம்பு விநாயகரை பழங்காலத்தில் இருந்தே, அப்பகுதியை சேர்ந்த 14 ஊர் பொதுமக்கள் வணங்கி வருகின்றனர். அவர்களின் தலைமையில், காணிபாக்கம் கோயில் கொண்டாட்டங்கள் நாளுக்கு நாள் தழைத்தோங்கின. பிரம்மோற்சவத்தின் போது 21 நாள்களும் விநாயக சுவாமி, ஒவ்வொரு நாளும் வாத்து, மயில், மூஞ்சுறு, யானை, குதிரை, ராவண பிரம்மா, யாழி உள்ளிட்ட வாகனங்களில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
கருணையை உருவான காணிபாக்கம் ஸ்ரீ வரசித்தி சுயம்பு விநாயகர்! இது குறித்து கோயில் நிர்வாக அலுவலர் வெங்கடேஷ் ஈடிவி பாரத்திடம் கூறுகையில், “காணிபாக்கம் பிரம்மோற்சவம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் 9ஆம் தேதி வரை வெகுசிறப்பாக நடக்கும். தற்போது கரோனா காலம் என்பதால், அரசு பல்வேறு விதிமுறைகளை விதித்துள்ளது.
தரிசன நேரம் காலை 6 மணிமுதல் மாலை 7 மணியாக குறைக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியன்று மூன்று ஆயிரம் முதல் ஐந்து ஆயிரம் பக்தர்கள் 11 மணி நேர காத்திருப்பு பின்னர் சுவாமியை தரிசனம் செய்தார்கள்.
மாட வீதிகளில் சுவாமியின் வாகன பவனி நடைபெறவில்லை. மாறாக கோயிலுக்குள் வாகன பவனி நடந்தது. வாகன பவனியின் போது பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை” என்றார்.
இதையடுத்து அன்னதானம் குறித்து கூறுகையில், “உணவு பிரசாதங்கள் பாக்கெட்டில் அடைக்கப்பட்டு பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டது” என்றார்.
விநாயகர் சதுர்த்தி மட்டுமல்லாமல், எல்லா நாள்களிலும் விநாயகருக்குரிய மந்திரங்களை உச்சரித்து வந்தால் அனைத்து தீய சக்திகளும் விலகி, நன்மையும், நல் வழியையும் அடைந்திட முடியும்.
மேலும் அவரை வணங்கி நெற்றியில் குட்டிக் கொண்டு தோப்புக்கரணம் போட்டு வர அறிவும், உடலும் வலுவடையும்.
இதையும் படிங்க:சுதந்திர உணர்வை விதைத்த புனே விநாயகர்!