காந்தியின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நமது ஈடிவி பாரத்திற்கு அண்ணா ஹசாரே பிரத்யேகமாகப் பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில், நாட்டின் வளர்ச்சிக்கு, நகர்மயமாக்கல் இன்றியமையாதது, ஆனால், எதிர்பாராதவிதமாக சுதந்திரத்திற்குப் பிறகு தவறான வழியில் சென்றோம் என வருத்தமாக தெரிவித்த அண்ணா ஹசாரே, கிராமங்களுக்கு முக்கியத்துவம் தருவதற்கு பதில் நகரங்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது என கூறினார்.
காந்தியின் 150ஆவது பிறந்த நாள் அடிப்படை வசதிகள் கிராமங்களுக்கு வழங்கப்படாததால், மக்கள் நகரங்களை நோக்கிச் செல்கின்றனர் என வேதனை தெரிவித்த அண்ணா ஹசாரே, மத்தியில் ஆட்சி செய்த அரசுகள் தொடர்ந்து நகரங்களுக்கு முக்கியத்துவம் அளித்தன என்றார். இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதற்கு கண்டனம் தெரிவித்த அண்ணா ஹசாரே, நிலைத்தன்மையான வளர்ச்சிக்கு கிராமங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும், இன்றைய காலகட்டத்தில் புதுப்பிக்க முடியாத வளங்கள் அதிகம் பயன்படுத்தப்படுவதால், மாசு ஏற்படுகிறது என தெரிவித்தார். வெப்ப நிலை உயர்வதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர் எனவும் ஹசாரே வேதனை தெரிவித்தார்.
'வாழ்க்கை உயர்வுபெற காந்தியின் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும்'
காந்தியத்தின் முக்கியத்துவம் குறித்து பேசிய அண்ணா ஹசாரே, “காந்தியின் கொள்கை இன்றளவும் முக்கியத்துவம் பெறுகிறது. அவரின் கொள்கைகளான உண்மை, அகிம்சை ஆகியவை மிகவும் வலிமையானது. அவரின் கொள்கைகளின் மதிப்புகளை அறிய, அவற்றை கண்மூடித்தனமாக பின்தொடர்வது மட்டும் பயன்படாது. காந்தியின் செயல் புனிதமானது. சத்தியாகிரகவாதிகளும் அதேபோல் செயல்பட வேண்டும். அவர்களின் குணம், நடப்பு, எண்ணம் ஆகியவை புனிதமாக இருக்க வேண்டும். சமூக பொறுப்புணர்வு தேவை. அவமானங்களைத் தாங்கிக்கொள்ள வலிமை வேண்டும். காந்தி ரயிலிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னரும், வெளியேற்றியவர் மீது அவர் கோபம் கொள்ளவில்லை.
காந்தியக் கொள்கைகள் இன்று சரியாக சொல்லித் தரப்படுவதில்லை. அனைவரின் வாழ்க்கையிலும் காந்தியின் எண்ணங்கள் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், ஏற்படுத்தவில்லை. காந்தியின் கொள்கைகளை சொல்லித் தருவதற்கு குடும்பங்கள் முன்வருவதில்லை. இளம் வயதிலேயே அதனை குழந்தைகளுக்கு கற்றுத் தர வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவைகூட காந்தியின் கொள்கைகளைக் கற்றுத்தருவதில்லை. குழந்தைகளுக்குப் புத்தக அறிவு உள்ளதே தவிர, அதனை வாழ்க்கையில் செயல்படுத்துவது எப்படி என்று அவர்களுக்கு கற்றுத்தரப்படுவதில்லை. சுயநலம் அதிகரித்துள்ளதால், உண்மையும், அகிம்சையும் தன் முக்கியத்துவங்களை இழந்துள்ளது" என்றும் அண்ணா ஹசாரே வேதனை தெரிவித்தார்.