சந்திரகாந்த் நாயுடுவின் கட்டுரையின் மொழிபெயர்ப்பு
தனது ஆரம்ப காலகட்டத்தில் தான் ஒரு சராசரி மாணவனாக இருந்ததாகவும், பொது வெளியில் தொடர்பு கொள்வதில் திறன் குறைந்தவராக இருந்ததாகவும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி தன்னை குறிப்பிடுகிறார். இடையறாத தொடர் முயற்சியால் தனது இடர்பாடுகளை களைந்து சிந்தனையாற்றல்மிக்க மனிதனாகவும், தீர்க்கமாக முடிவெடுக்கும் பொதுத்தளத் தலைவராகவும் தன்னை மேம்படுத்திக் கொண்டவர் காந்தி.
தனது 21ஆவது வயதில் லண்டனில் சட்டப்படிப்பு பயின்ற காந்தி 'தி வெஜிடேரியன்' என்ற ஆங்கில பத்திரிகையில் இந்தியாவின் உணவுப் பழக்கம், கலாசாரம், மத விழாக்கள் குறித்து தொடர் கட்டுரைகளை எழுதினார். கருத்துகளை எளிய முறையில் நேரடி மொழியில் தரும் பாணியை அவரின் ஆரம்ப காலக்கட்ட கட்டுரைகளின் மூலம் எளிதாக உணரலாம். பிறரை ஈர்க்க வேண்டும் என்பதற்காக வார்த்தை ஜாலங்களின் மூலம் விளையாட்டுகளை காட்டக் கூடாது என்பதை கவனமாக தவிர்த்தார். அவர் நோக்கமானது உண்மையை எடுத்துரைத்து, மக்களுக்கு அறிவை புகட்டுவதில் மட்டுமே இருந்தது.
காந்தி தென்னாப்பிரிக்காவுக்குச் சென்ற மூன்றாவது நாளே அங்குள்ள நீதிமன்றத்தில் நிற வேற்றுமைக் காரணமாக அவமானப்படுத்தப்பட்டார். இந்தச் சம்பவத்தை அங்குள்ள உள்ளூர் நாளிதழில் அப்போது செய்தியாகவும் பதிவு செய்கிறார். தென் ஆப்ரிக்காவில் நிறவெறி இருந்த அதேசமயம் பத்திரிகை சுதந்திரமும் காக்கப்பட்டது. இதன் காரணமாக தென்னாப்பிரிக்காவில் காந்தி பொது வாழ்க்கையில் ஈடுபட்டபோது அந்நாட்டைச் சேர்ந்த நாளிதழ்களுக்கும் சில இந்திய நாளிதழ்களுக்கும் தொடர் கடிதங்களை எழுதத் தொடங்கினார். இந்த காலகட்டத்தில்தான் அப்போதைய மதராஸ் மாகாணத்தைச் சேர்ந்த மூத்த செய்தியாசிரியரான ஜி.வி. நடேசனிடம் நட்பு ஏற்பட்டது.
தென்னாப்ரிக்காவில் காந்தி தென்னாப்பிரிக்காவில் காந்தி வாழ்ந்த காலமானது அவரின் பத்திரிகை வாழ்க்கையின் போக்கை சரியான வழியில் வடிவமைத்தது எனலாம். தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்திய மக்களின் உரிமைக்குரலாக பத்திரிகை கடிதங்கள் மூலம் ஒலிக்கத் தொடங்கிய காந்தி உண்மைக்காகவும் பொது நலனுக்காகவும் தனது இளம் வயதிலேயே சமரசமின்றி செயல்படத் தொடங்கினார்.
1894ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி 'டைம்ஸ் ஆஃப் நாட்டல்' என்ற தென்னாப்பிரிக்க பத்திரிகையில் நிறவெறி குறித்து அவர் எழுதியதாவது, "வெள்ளையர் இனத்தைச் சாராதவர்கள் என்பதால் தென்னாப்பிரிக்கவின் பூர்வக்குடிகளான கருப்பர்களுக்கும் இந்தியர்களுக்கும் வாக்குரிமையானது மறுக்கப்படுகிறது. உங்கள் பார்வையில் புறத்தோற்றமே பிரதானம். வெள்ளைத் தோலுக்கு அடியில் தேன் இருந்தாலும் சரி - விஷம் இருந்தாலும் சரி அதைப்பற்றி நீங்கள் பொருட்படுத்துவது இல்லை.
பைபிளில் கூறப்பட்டுள்ள நற்பண்புகளை நீங்கள் ஒருமுறை மீண்டும் படித்துப்பாருங்கள். அதைப்படித்த பின்னர் மாற்று இனத்தவரிடம் பாகுபாடு காட்ட முற்படுவீர்கள் எனில் உங்களிடம் இது குறித்து பேசுவதிலோ விவாதிப்பதிலோ பயனில்லை" என்று வெள்ளையர்களிடன் வெளிப்படையாக தனது கருத்தை முன்வைத்தார்.
காந்தி கையெழுத்துப் பிரதி அகிம்சை வழி மூலம் காந்தி நடத்திய ஒத்துழையாமை போராட்டமானது பின்னாளில் தென்னாப்பிரிக்க நிறவெறி விடுதலைப் போராளியான நெல்சன் மண்டோலாவுக்கு உந்துசக்தியாக இருந்தது. காந்தி தென்னாப்பிரிக்காவில் சில ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார். ஆனால் அவர் சென்றபின்பும் அவரின் கொள்கையை அந்நாடு முழுமையாக உள்வாங்கிக்கொண்டது.சத்தியத்திற்காக காந்தி கொண்டிருந்த சமரசமில்லாத பண்பையும் அவரின் கொள்கை உறுதியையும் இந்தியாவின் முன்னணி செய்தியாசிராக இருந்த ரம்நாத் கோயங்கா, அஜித் பட்டாச்சார்ஜியா, மூல்கோவான்கர், பி.ஜி. வெர்கிஸ், வி.கே. நரசிம்மன் உள்ளிட்டோர் அவசர நிலை காலத்தின்போது நிலைநிறுத்தினர். அவசரநிலையின் அடக்குமுறையை தைரியத்துடன் எதிர்கொண்டுவர்கள் இவர்கள்.
மேற்கண்ட காந்தியின் செயல்பாடுகள் இன்றைய காலகட்டத்தில் பெரிதும் தேவைப்படுகிறது. 1903ஆம் ஆண்டு தொடங்கி தனது இறுதி மூச்சுவரை 30 கோடி மக்களின் எதிர்பார்ப்பை சுமந்த அரசியல்வாதியாக மட்டுமில்லாது பத்திரிகையாளராகவும் தொடர்ந்து செயல்பட்டவர் காந்தி. சத்தியத்தை நேரடி மொழியில் சமரசமின்றி எடுத்துரைக்கும் காந்தியின் பார்வையானது இன்றைய பத்திரிகைத் துறையில் சுய பரிசோதனைக்குட்பட்டுள்ளது. காந்தியை வெறும் வழிபாட்டுத்தலைவராக பார்ப்பதைவிட்டு, அவரின் கொள்கைகளை உள்வாங்க வேண்டியதே இன்றையத் தேவையாகும். இதுவே அவரின் 150ஆவது பிறந்தநாளில் நாம் அவருக்கு செலுத்தும் பொருத்தமான அஞ்சலியாக இருக்கும்!