தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காந்தி 150: தேச ஒற்றுமையை கற்றுத்தந்த அண்ணலின் இரு தொண்டர்கள் - Gandhi abdul Gafar khan

காந்தியின் 150ஆவது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ள நிலையில் காந்தியின் இரண்டு தொண்டர்களான அப்துல் கபார் கான், மவுலானா ஆசாத் என்ற தலைப்பில் பேராசிரியர் ஆசாத் மிஸ்ரா நமது ஈடிவி பாரத் செய்திக்கு எழுதிய சிறப்புக் கட்டுரை இதோ...

Gandhi

By

Published : Sep 23, 2019, 3:48 PM IST

காந்தியின் அகிம்சை தத்துவத்தை ஏற்று லட்சக்கணக்கான இந்திய மக்கள் விடுதலை வேள்வியில் பங்கேற்றனர். சாமானிய இந்திய மக்களைக்கொண்டு உலகின் வல்லாதிக்க சக்தியான பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்து நின்றார் காந்தி. காந்தியின் வருகையானது பல்வேறு குழுக்களாக பிளவுபட்டுக் கிடந்த இந்திய மக்களையும் ஒருங்கிணைத்தது. குறிப்பாக 1919ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் அமைப்பு, கிலாபத் இயக்கத்துக்கு ஆதரவு அளித்து இந்து இஸ்லாமிய மக்களின் ஒற்றுமையை உருவாக்கும் பாலமாக அமைந்தது.

இந்த ஒற்றுமையின் மூலம் கான் அப்துல் கபார் கான், மவுலானா ஆசாத் என்று இரு பெரும் இஸ்லாமிய தலைவர்கள் காந்தியின் கண்ணியமிக்க சீடர்களாக உருவாகினர்.

இந்தியாவின் வடமேற்கு எல்லைப் பகுதியில் பஷ்துன் பழங்குடி இனத்தில் பிறந்த கான் அப்துல் கபார் கான் எல்லை காந்தி என்று இந்திய மக்களால் அழைக்கப்படுகிறார். அண்ணல் காந்தியின் அகிம்சை கொள்கையால் பெரிதும் ஈர்க்கப்பட்ட அவர், காந்தியின் சத்தியாகிரகப் போராட்டத்தைப் போலவே கடவுளின் சேவகர்கள் என்ற பெயரில் 'குதாய் கித்மாட்கர்' எனும் இயக்கத்தை உருவாக்கினார்.

இதுவரை கண்டிராத அளவிற்கு பஷ்தூன் இனத்தினர் மக்கள் இயக்கமாக ஒருங்கிணைந்து அகிம்சை வழியில் போராடிய பெருமை எல்லை காந்தி, கான் அப்துல் காபர் கானையே சாரும். மாறுபட்ட சூழலிலிருந்து வந்திருந்தாலும் காந்தி மற்றும் அப்துல் கபார் கானின் லட்சியம் ஒன்றாகவே இருந்தது. மதச்சார்பின்மையுடன் கூடிய பிளவுபடாத சுதந்திர இந்தியாவே இருவரின் கனவாகவும் இருந்துவந்தது. மதத்தின் பெயரால் வெறுப்புணர்வை உருவாக்கி மக்களை பிளவுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிராக ஒற்றுமையுடன் இருவரும் இறுதிவரை செயல்பட்டனர்.

காந்தியின் மற்றொரு உண்மைத் தொண்டரான மவுலானா ஆசாத் இந்தியா விடுதலைப் போராட்டத்தின் முக்கிய முகமாகத் திகழ்ந்தார். எழுத்தாளராகவும், பத்திரிகையாளராகவும் உத்வேகத்துடன் பணியாற்றிய மவுலானா ஆசாத், சத்தியாகிரகப் போராட்டக் கருத்துகளைத் தனது எழுத்துக்களின் மூலம் மக்களிடம் கொண்டுசென்றார். 1930க்குப் பின் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவரான முகமது அலி ஜின்னா இந்து இஸ்லாமிய மக்களுக்கிடையே பிளவை உருவாக்கும் நோக்கில் அடிப்படைவாத கருத்துகளை முன்வைத்தார். அவரின் பிரிவினைவாதக் கருத்துகளை முற்றிலுமாக நிராகரித்தார்.

காங்கிரஸ் காரிய கமிட்டியின் முக்கிய தலைவராக உருவாகிய மவுலானா ஆசாத், அதன் பொதுச்செயலாளராகவும், தலைவராகவும் பலமுறை பதவி வகித்துள்ளார். ஒன்றுபட்ட இந்தியாவே ஆசாத்தின் கனவாக இருந்தாலும் தேசப்பிரிவினை தவிர்க்க முடியாத நிகழ்வாக அமைந்தது. இறுதிவரை இந்தியாவுக்காகவே பாடுபட்ட ஆசாத் டெல்லியில் ஜாமிய மிலியா என்ற பெயரில் கல்வி நிறுவனம் ஒன்று நிறுவினார். தற்போது அது இந்தியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

ABOUT THE AUTHOR

...view details