காந்தியின் பொருளாதார சிந்தனைகள்:
பலரும் காந்தியடிகள் முன்வைத்த பொருளாதாரத்தை கற்பனையான ஒன்றாகவும் அடைய முடியாத ஒன்றாகவுமே கருதுகின்றனர். ஆனால், உண்மையில் காந்தியடிகள் முன்வைத்த பொருளாதாரம் சோசலிசத்தை உள்ளடக்கிய எளிமையான ஒன்று.
காந்தி முன்வைத்த பொருளாதார சிந்தனைகள் என்பது பொருளாதார வளர்ச்சியுடன் தொடர்புடைய பல்வேறு முரண்பட்ட அம்சங்களை ஒன்றிணைக்கும் ஒரு புது முயற்சியாகும். காந்தியடிகள் பொருளாதாரத்தையும் நெறிமுறைகளையும், வளர்ச்சியையும் சமத்துவத்தையும், செல்வத்தை உருவாக்குவதையும் பரவலாக்குவதையும் ஒன்றிணைக்க எண்ணினார். இவை அனைத்தும்தான் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அடிப்படையான, ஆனால் ஒவ்வொன்றுக்குமிடையே முரண்பட்ட ஒன்றாகும்.
ஒரு பொருளாதார அமைப்பானது, அதிலுள்ள அனைவரும் பணிபுரிவதற்கு வாழ்வதற்கு போதிய பிரதிபலன்களையும் சமமான வாய்ப்புகளையும் வழங்கவேண்டும் என்பதில் காந்தியடிகள் உறுதியாக இருந்தார். காந்தியடிகள் ஒருபோதும் ஆடம்பர வாழ்க்கையை ஊக்குவிக்கவில்லை; மக்கள் ஆடம்பரத்தைத் தவிர்த்து, ஒர் எளிய வாழ்க்கையை வாழ வேண்டும் என்றே அவர் விரும்பினார்
கிராமப்புறப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வரைமுறையற்ற தொழில்மயமாக்கலை காந்தியடிகள் கடுமையாக எதிர்த்தார். மாறாக கிராமப்புற பகுதிகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்க, மக்கள் விவசாயத்திலும் சிறு குறு தொழில்களிலும் ஈடுபடவேண்டும் என்பதே காந்தியின் யோசனை.
அச்சமயத்தில் இந்தியா பெரியளவில் விவசாயத்தையே நம்பியிருந்ததால் காந்தியடிகள் இந்த யோசனையை முன்வைத்தார். இந்தியா அதிக மக்கள் தொகை காரணமாக, தொழிலாளர்கள் வளம் பெற்ற ஒரு நாடாக இருந்தது மற்றொரு காரணம்.
ஒரு நாட்டின் பொருளாதாரம் என்பது பரவலாக்கப்பட்டு அனைவருடைய வளர்ச்சியையும் உள்ளடக்கி இருக்க வேண்டும் என்பதே காந்தியடிகளின் பார்வை. அவ்வாறு அடையும் வளர்ச்சியின் மூலமே சமூக நல்லிணக்கத்தையும் சமத்துவத்தையும் மேம்படுத்த முடியும் என்பதை காந்தி உறுதியாக நம்பினார்.
மறுபுறம், ஒரு ஒருகிணைந்த கூட்டமைப்பின் மூலம் செயல்படும் வணிக மாதிரியை காந்தி ஆதரித்தார். அதில் கிடைக்கும் லாபத்தை அனைத்து பங்குதாரர்களுடனும் சரி சமமாக பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்றார். இதன் மூலம் ஏழை மக்கள் சுரண்டுப்படுவது தடுக்கப்படும் என்றும், அனைத்து செல்வங்களும் ஒரே இடத்தில் குவிப்பதை தடுக்க முடியும் என்பதில் உறுதியாக இருந்தார் காந்தியடிகள்.
காந்திய பொருளாதாரம் இன்றைய சமுதாயத்தில் பொருந்தக் கூடியதா?
காந்தி முன்வைத்த பொருளாதரா சீர்திருத்தங்களைப் பற்றி ஒருவர் விவாதிக்கும்போது, அது பல நாட்டுப் பொருளாதாரங்களும் ஒன்றிணைக்கப்பட்டுச் செயல்படும் இக்காலத்து தாராளமயமாக்கலும் உலகமயமாக்கலும் நிறைந்த சமூகத்தில் ஏற்றதா என்ற கேள்வி எழலாம்.
இந்தக் கேள்விக்கான பதிலைப் புரிந்துகொள்ள ஒருவர் காந்தியின் காலத்திலிருந்து இந்தியாவின் பொருளாதாரம் எவ்வாறு மாற்றமடைந்துள்ளது என்பதை அறியவேண்டும்.
முக்கியமாக இரு மாற்றங்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அப்போது எடுக்கபட்ட பொருளாதாரக் கொள்கை முடிவுகளே இந்திய பொருளாதாரத்தின் போக்கை ஒட்டுமொத்தமாக மாற்றியமைத்தது. காந்திய பொருளாதார சிந்தனைகளிலிருந்து இந்தியா கொஞ்சம் கொஞ்சமாக விலகிச் செல்ல ஆரம்பித்தது. சுதந்திரத்திற்கு பிறகு ஜவஹர்லால் நேரு பிரதமராக பொறுப்பேற்றார், காந்தியின் கொள்கைக்கு நேரெதிராக இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தில் பெரிய நிறுவனங்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தரப்பட்டது.
இது காந்திய கொள்கைக்கு எதிரான ஒன்றாகும். மக்கள் தொகை அதிகம் உள்ள படிப்பறிவு இல்லாத ஏழை மக்கள் அதிகம் கொண்ட இந்தியா ஆங்கிலேயர்களால் சுரண்டப்பட்டது. இப்படிப்பட்ட இந்தியாவில் காந்திய பொருளாதார மாதிரியை செயல்படுத்துவது கடினமாகும்.
முதன்மையாக செல்வம் உருவாக்கப்பட்டால்தான் அதனை பிரித்துத் தரமுடியும். எனவே, செல்வத்தை உருவாக்குவதற்காக தொழில்மயமாக்கலை நோக்கி நம் பொருளாதாரம் சென்றது. இருந்தபோதிலும் பொருளாதார பிரச்னை தொடர்ந்து மோசமடைந்தது.