தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காந்தி 150: அண்ணலின் பார்வையில் வாழ்வும்... மரணமும்...! - மரணத்தைப் பற்றி காந்தி

வாழ்வுக்கும் மரணத்திற்கும் உள்ள தொடர்பைத் தெளிவாக விளக்கும் காந்தியடிகள், நீண்ட காலம் சந்திக்காமலிருந்த ஒரு நண்பனை முத்தாய்ப்பாக சந்திப்பது போலத்தான் மரணத்தை ஒருவர் எதிர்கொள்ள வேண்டும் என்று பேசியுள்ளார்.

Gandhi 150

By

Published : Sep 25, 2019, 11:59 AM IST

இந்தாண்டு காந்தியடிகளின் 150ஆவது பிறந்தநாளை நாம் கொண்டாடவிருக்கிறோம். அதேபோல காந்தியடிகள், இந்தப் பூவுலகைவிட்டுப் பிரிந்தும் 70 ஆண்டுகள் கடந்துவிட்டது. இந்தச் சமயத்தில் மரணம் பற்றி காந்தியடிகள் கூறியதை பற்றி அனைவரும் அறிந்துகொள்வது சரியாக இருக்கும்.

காந்தியடிகள் கூறிய அனைத்து கருத்துகளும் பேசப்பட்டும் எழுதப்பட்டும் விவாதிக்கப்பட்டுவிட்டன. அவர் மரணத்தைப் பற்றியும் மிக அழகாகவும் ஆழமாகவும் விளக்கியுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் இருந்தபோது அவர் எழுதிய சத்தியாகிரக என்ற புத்தகத்தில் மரணத்தைப் பற்றி கூறும்போது, "மரணம் என்று வரும்போது அனைவரும் சந்தேகமில்லாமல் நம்பிக்கையை இறைவன் மீது வைக்க வேண்டும்" என்றார்.

வாழ்வுக்கும் மரணத்திற்கும் உள்ள தொடர்பைத் தெளிவாக விளக்கும் காந்தியடிகள், "நீண்ட காலம் சந்திக்காமலிருந்த ஒரு நண்பரைச் சந்திப்பது போலத்தான் மரணத்தை ஒருவர் எதிர்கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.

தனது பொது வாழ்க்கையில் ஆரம்பம் முதலே அச்சமின்றி செயல்பட்டவர்தான் காந்தி. இந்த மனப்பான்மையே அவரை அனைத்துவிதமான அச்சங்களிலிருந்தும் விடுவித்தது. முக்கியமாக, மரணத்தைப் பற்றி காந்தியடிகள் பயம் கொள்ளாமல் இருந்ததற்கும் இதுவே பிரதான காரணம்.

அச்சமின்றி இருப்பதையும் சத்தியாகிரகத்தையும் ஒருபோதும் பிரிக்க முடியாது. இதனால்தான் காந்தி உண்மையை காப்பாற்ற தனது இன்னுயிரை விடவும் தயாராக இருந்தார். .

சொல்லப்போனால், 1926ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி Young India-வில் அவர், 'மரணம் என்பது உற்றத் தோழன் மட்டுமல்ல; மிகச் சிறந்த கூட்டாளி' என்று எழுதியுள்ளார். எனவே, காந்தியடிகள் மரணத்தைக் கண்டு ஒருபோது அஞ்சியதில்லை என்பதைத் தெளிவாக இது காட்டுகிறது.

இதுமட்டுமின்றி, மரணம் என்பது எப்போது நிகழ்ந்தாலும் அது பாக்கியமான ஒன்றே என்றும் அவர் கூறியுள்ளார். ஒருவன் தான்கொண்ட கொள்கையை நிறைவேற்ற உயிரிழந்தால், இந்த பாக்கியம் இரட்டிப்பாகும் என்றும் கூறுகிறார்.

காந்தியின் தியாகத்தை ஆச்சார்யா ஜே.பி. கிருபாளனி இவ்வாறு குறிப்பிடுவார்: "இங்கு தியாகத்திற்கான தேவைகள் குறையும்போதெல்லாம், அது தேவைப்படும் புதிய சூழ்நிலைகளை ஆராய காந்தி முற்படுவார்" என்று.

இதனால்தான் 1948-க்கு முன்பும் அவரை கொல்ல பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவரை தென் ஆப்பிரிக்காவிலேயே வைத்துக் கொல்லவும் முயற்சிகள் அரங்கேறின. நல்வாய்ப்பாக அங்கிருந்த அவரது ஆங்கிலேய நண்பர் அவரை காப்பாற்றினார். இந்தியாவிலும்கூட 1934ஆம் ஆண்டு முதல் அவரது உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்துவந்துள்ளது.

பாரத தேசமானது அவரின் உயிரையும் ஒருநாள் கேட்கும் என்பதைக் காந்தி தெளிவாகப் புரிந்துவைத்திருந்தார். 125 ஆண்டுகள் வாழ விரும்பிய காந்தி, தன் உயிருக்கு அச்சுறுத்தல்கள் உள்ளது என்பதை உணர்ந்தபோதும், அவருக்கென தனியாக எந்தவொரு பாதுகாப்பையும் வைத்துக்கொள்ள எண்ணியதில்லை.

தான் மரணிக்கும் பல ஆண்டுகளுக்கும் முன்பே காந்தியடிகள் அந்த அச்சத்தை தன்னிடமிருந்து விடுவித்துக்கொண்டார். இதனால்தான் பட்டியலினத்திற்கான உரிமை மீட்பு போராட்டமாயினும் காலனி ஆதிக்கத்தை எதிர்த்து ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டமாயினும் அனைத்திலும், தைரியமாகத் தலைமை தாங்க அவரால் முடிந்தது.

நோகாலி (Noakhali) கிராமத்தில் ஒரு சிறிய குழுவுடன் இணைந்து இந்துக்களின் உயிரைக் காக்க முயன்ற காந்தி அப்போது பிரபலமானவர் இல்லை. ஆனாலும் அப்போது அவர் உள்ளிருந்த தார்மீக பற்றின் காரணமாக, அவர் புறக்கணிக்கவே முடியாத தலைவராக உருவெடுத்தார். இதுவே காந்தியை அனைத்துவித அச்சங்களிலிருந்தும் விடுவித்து, வாழ்வையும் மரணத்தையும் ஒருசேர ஏற்றுக்கொள்ளும் மகாத்மாவாக மாற்றியது.

இதையும் படிக்கலாமே: காந்தி 150: சத்தியத்தில் கடவுளைக் கண்ட காந்தி!

ABOUT THE AUTHOR

...view details