நாட்டில் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் விதமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் தினக்கூலிகள், சிறு,குறு தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளும், தன்னார்வ அமைப்புகளும் உதவி செய்துவருகின்றன.
அந்தவகையில், டெல்லியில் ரேஷன் கார்டு இல்லாத 30 லட்ச மக்களுக்கு இலவச அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். மேலும், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மக்களவை உறுப்பினர்கள் மூலம் இதற்கான கூப்பன்கள் மக்களிடம் விநியோகிக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
அதன் அடிப்படையில் முதல்கட்டமாக அவர் இரண்டாயிரம் கூப்பன்களை சட்டப்பேரவை உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர்களிடமும் வழங்கினார். இந்நிலையில், தனக்கு வழங்கப்பட்ட இரண்டாயிரம் ரேஷன் கூப்பன்களை வாங்க இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கிழக்கு டெல்லியின் தற்போதைய பாஜக எம்பியுமான கவுதம் கம்பீர் மறுத்துள்ளார்
இது குறித்து கவுதம் கம்பீர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இரண்டாயிரம் ரேஷன் கூப்பன்களை வழங்கியதற்கு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால், என்னுடைய தன்னார்வலர்களிடம் தேவைப்படும்வரை மக்களிடம் விநியோகிக்க போதுமான உணவு உள்ளது. இந்த கூப்பன்களை தேவைப்படும் எம்.எல்.ஏகளுக்கும், கவுன்சிலருக்கும் அனுப்பி வையுங்கள். மேலும் உங்களுக்கு அதிகமான ரேஷன் பொருள்கள் தேவைப்பட்டாலும் எனக்கு தெரியப்படுத்துங்கள் நான் வழங்குகிறேன்" என பதிவிட்டிருந்தார்.
இதையும் படிங்க:தனது வீட்டு வேலை செய்து மறைந்த பெண்ணிற்கு கம்பீர் இறுதிச் சடங்கு