டெல்லி உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்துவருகிறது. இந்நிலையில், இதுதொடர்பாக டிவிட் செய்துள்ள டெல்லி கிழக்கு தொகுதி எம்.பி. கவுதம் கம்பீர், டெல்லியில் கரோனா வைரஸ் அதிகளவில் பரவ மத்திய அரசு, அண்டை மாநிலங்கள், குறைவான அளவில் மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனை என பிறர் மீது பழிசுமத்திவந்த முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால், அடுத்ததாக கரோனா பரவலுக்கு காரணம் உச்ச நீதிமன்றம்தான் என்று கூறப்போகிறார் என்று சாடியுள்ளார்.
கரோனாவை டெல்லி அரசு சரியான முறையில் கையாளவில்லை என்ற உச்சநீதிமன்றத்தின் விமர்சனங்களை கம்பீர் மேற்கோள் காட்டியுள்ளார்.
அதுமட்டுமின்றி, அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு, இறந்த உடல்களை மிகவும் வருந்தத்தக்க வகையில் கையாள்வதாகவும், கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை விலங்குகளைவிட மோசமாக நடத்துவதாகவும் உச்ச நீதிமன்றம் குற்றஞ்சாட்டியுள்ளது. இறந்தவர்கள் குறித்து எவ்வித அக்கறையும் காட்டப்படவில்லை என்றும், இறந்தவர்களின் உறவினர்களுக்கு பல நாள்கள் ஆகியும் தகவல் தெரிவிக்கப்படவில்லை எனவும் நீதிமன்றம் விமர்சித்துள்ளது.
டெல்லி மருத்துவமனைகளில் வெளி நபர்களுக்கு சிகிச்சையளிப்பதை தடைசெய்தது, பின்னர் துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் தலையிட்டு இதனை சரிசெய்தார். ஊரடங்கை தளர்த்துவதற்கு முன் பல முறை சிந்திக்கும்படி ஏற்கனவே மாநில அரசை எச்சரித்ததாகவும், அதற்கு செவி சாய்காத ஒரே நேரத்தில் ஊரடங்கில் தளர்வை அறிவித்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஊரடங்கை தளர்த்தும் முடிவு டெல்லி மக்களுக்கு ஒரு மரண உத்தரவாதமாக முடியும் என்று, மாநில அரசாங்கத்தை மீண்டும் மீண்டும் சிந்திக்கும்படி கேட்டுக்கொள்வதாக கம்பீர் செய்திருந்த ட்வீட்டையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.