'உன் நண்பன் யார் என்று சொல்; நீ யார் என்று சொல்கிறேன்!' என்ற சொல்லாடல் மிகவும் பிரபலம். ஏனென்றால் நாம் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் நாம் சேரும் சேர்க்கை நம்மை நல்ல வழிக்கு கொண்டுவரும் என்ற நம்பிக்கையுடன் நகருவதுதான் அந்த மூன்றெழுத்து. அதுதான் நட்பு.
குழந்தைப் பருவம் முதல் முதுமை வரை நாம் அனைவரும் வயது வித்தியாசமின்றி நட்பை பாராட்டி சீராட்டிதான் வருகிறோம். இந்த நட்பு இப்போதுதான் வந்ததா என்றால், இல்லை. மனிதகுலம் தோன்றிய காலத்திலேயே தோன்றியது.
இருப்பினும், நட்புக்கென புதிய இலக்கணம் வகுத்தது தமிழ் சமூகம் என்றால் அது மிகையல்ல. அது எப்படி என்றால் நம் மூப்பாட்டனின் மூத்தோரான ஐயன் திருவள்ளுவர் இயற்றிய உலகப் பொதுமறை இலக்கியமான திருக்குறளில் நட்பை பற்றி நட்பியல் எனும் அதிகாரத்தையே படைத்துள்ளார். அதில் நட்பு எப்படி இருக்க வேண்டும், நண்பன் என்பவன் எவ்வாறு இருக்க வேண்டும் உள்ளிட்ட பலவற்றை புட்டுபுட்டுவைத்துள்ளார். அதில் சில குறள்கள் வாசகர்களின் பார்வைக்கு...
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு - நட்பைப் போல் ஒருவன் செய்து கொள்வதற்கு அருமையான செயல் எதுவுமே இல்லை.
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு - ஆற்று வெள்ளத்தில் உடையை இழந்தவனது கை மானத்தை மறைக்க உதவும்; அது போலத்தான் நண்பன் துன்பப்படும் வேளையில் விரைந்து உதவ வேண்டும்.