கரோனா அச்சுறுத்தல் அதிகரித்த மார்ச் மாதத்தில் கோவிட்-19 பரவலுக்கு டெல்லியில் நடந்த தப்லீக் ஜமாஅத் மாநாட்டை காரணம் காட்டி செய்திகளை வெளியிட்ட ஊடகங்களை எதிர்த்து ஜாமியத் உலமா-இ-ஹிந்த் மற்றும் பலர் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
அம்மனுவில், "கோவிட் -19 பரவலுக்கு டெல்லியில் நடந்த தப்லிக் ஜமாஅத் மாநாடு தான் காரணமெனக் கூறி ஒருதலைப்பட்சமாக பொய்யான செய்திகளை பரப்பி வகுப்புவாத சிந்தனைகளைத் தூண்டி மத வெறுப்புணர்ச்சியை மக்கள் மயமாக்க முயன்றனர்.
இத்தகைய தவறான செயல்களை கண்டித்து, உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வுக்கு முன்பாக விசாரிக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக நடைபெற்ற விசாரணையின்போது, மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் உரிய பதிலளிக்கக் கோரியிருந்தது. இந்நிலையில் நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் செயலாளர் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தார். அதனை ஆராய்ந்த நீதிபதி எஸ்.ஏ.போப்டே, "உச்ச நீதிமன்றத்தை மத்திய அரசு விரும்புவதைப் போல விரும்பிய வகையில் அணுக அனுமதிக்க முடியாது.
கோவிட் -19 தொற்றுநோய் அச்சுறுத்தலுக்கு மத மாநாட்டை காரணமாக ஊடகங்கள் திரித்து செய்திகளை வெளியிட்டை ஏற்க முடியாது. இந்த விவகாரம் குறித்து மத்திய அரசிடம் உரிய பதிலை நீதிமன்றம் எதிர்ப்பார்த்தது. காலம் தாமதமாக மத்திய அரசு அளித்த அறிக்கையில் குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்கும் வகையில் அவற்றை மறுத்துள்ளது.
இதனை நீதிமன்றம் வன்மையாக கண்டிக்கிறது. இளைய அலுவலரான கூடுதல் செயலாளர் தான் பதிலை தாக்கல் செய்வாரா ? துறைச்சார்ந்த தலைமை செயலாளர் நீதிமன்றத்தில் பதிலளிக்க மாட்டாரா? ஊடகங்களுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையையும் மத்திய அரசு ஏன் எடுக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது.
ஊடக சுதந்திரம் என்பதை அண்மைக் காலமாக பலர் தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர்" எனத் தெரிவித்தார். மேலும், மனு தொடர்பாக உரிய பதிலை துறைச் சார்ந்த செயலாளர் அளிக்க வேண்டுமென உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைப்பதாக அறிவித்தார்.