உத்தரப் பிரதேச நொய்டா மெட்ரோ கழகத்தைச் சேர்ந்த அக்வாலைன் வழித்தடத்தில், நொய்டாவில் உள்ள பிரிவு 76, கிரேட்டர் நொய்டாவில் உள்ள பாரி சோக் ஆகியன பிங்க் நிலையங்கள் என வரையறுக்கப்படுகின்றன. இங்கு, ஏற்கனவே, தாய்ப்பால் கொடுக்கும் தனி அறை, குழந்தைகளுக்கு டயப்பர் மாற்றும் அறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், பெண்கள் தினமான மார்ச் 8ஆம் தேதியிலிருந்து பிங்க் நிலையங்களில் இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படவுள்ளன. குறிப்பாக, அவ்விரு நிலையங்களிலும், முழுக்க பெண் ஊழியர்களைப் பணி நியமனம்செய்வது குறித்து ஆலோசிக்கப்படுகின்றது. பாதுகாப்பு குறித்த பணிகளைத் தவிர பிற வேலைகளுக்குப் பெண்களை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக மெட்ரோ அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.