இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கோவிட் -19 பரவலைத் தடுக்க மத்திய அரசு அமல்படுத்தியுள்ள ஊரடங்கு நடைமுறையில் உள்ள இந்த நேரத்தில், பிரதான் மந்திரி கரிப் அன்ன யோஜனா (பி.எம்.ஜி.ஏ) திட்டத்தின் கீழ் மக்களுக்கு உணவு தானியங்களை வழங்கும் பொறுப்பு இந்திய உணவுக் கழகத்திடம் (எப்.சி.ஐ) ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு தானியங்கள் வழங்குவது மே 15ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பொது விநியோக முறையின் கீழ் ரேஷனை விநியோகிக்க வேண்டும். நாட்டில் உணவு தானியங்களுக்கு பஞ்சமில்லை. இந்திய உணவுக் கழகத்திடம் ஏறத்தாழ 671 லட்சம் டன் உணவு தானியங்கள் இருப்பில் உள்ளன.
23 மாநிலங்களில் ‘ஒன் நேஷன், ஒன் ரேஷன் கார்டு’ திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அந்த 23 மாநிலங்களைச் சேர்ந்த 83 விழுக்காடு மக்களை அதாவது, 67 கோடி பயனாளர்களுக்கு இந்த திட்டம் சென்றடைய ஏற்பாடு செய்யப்படும். 2021ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள், இந்த திட்டம் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்படும். 'ஒன் நேஷன், ஒன் ரேஷன் கார்டு' திட்டத்தின் கீழ், நாட்டில் வாழும் எந்தவொரு நபருக்கும் ஒரே ரேஷன் அட்டை இருக்கும், மேலும் நாட்டில் எங்கிருந்தும் ரேஷன் எடுக்க முடியும். எந்தவொரு அரசாங்க ரேஷன் கடையிலிருந்தும் உணவு தானியங்களை குறைந்த விலையில் வாங்கி பயன்பெற முடியும்.