தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த பட்டதாரி ஒருவர், வேலை தேடுவதற்காக Naukri இணையதளத்தில் பணத்தை செலுத்தி பதிவு செய்துள்ளார். இருப்பினும் நிறுவனம் தரப்பில் பதிவு செய்தது தொடர்பான மின்னஞ்சல் எதுவும் வரவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி, அந்த இளைஞருக்கு தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர், சார் நாங்கள் Naukriயிலிருந்து பேசுகிறோம். நீங்கள் மீண்டும் ஒரு முறை பதிவு செய்ய வேண்டும் என படிவம் ஒன்றை வழங்கியுள்ளனர். இம்முறை நீங்கள் செலுத்தும் பணம் விரைவில் திரும்பு செலுத்தப்படும் என ஆசை வார்த்தைகளையும் அவரிடம் கூறியுள்ளனர்.
இதை உண்மை என நம்பிய அந்த இளைஞர், படிவத்தை பூர்த்தி செய்தது மட்டுமன்றி ஒரு முறை செல்போனுக்கு வரும் ஓடிபி எண்ணையும் அனுப்பியுள்ளார். அவ்வளவுதான், ஓடிபி எண் அனுப்பிய சில நொடிகளிலேயே இளைஞரின் வங்கி கணக்கிலிருந்து ரூ.96 ஆயிரத்தை சுருட்டியுள்ளனர். நாம் ஏமாற்றப்பட்டோம் என்பதை அறிந்த அந்த இளைஞர், உடனடியாக ஹைதராபாத் சைபர் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் டிஜிட்டல் மோசடி கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.