பிரான்ஸ் நாட்டின் ஆளுமையின் கீழிருந்த புதுச்சேரி அரசு இந்தியாவோடு இணைந்த நாளை நினைவுகூரும் வகையில் சட்டப்பூர்வ பரிமாற்ற நாள் விழா, சுதந்திர தினவிழா ஆகியவை வில்லியனூர் அருகே உள்ள கீழூரில் நடைபெற்றது.
பிரான்ஸ் நாட்டு ஆட்சியின் கீழ் நிர்வகிக்கப்பட்டுவந்த புதுச்சேரி அரசு, இந்தியாவுடன் இணைவது தொடர்பாக புதுவை மக்கள் பிரதிநிதிகள் 178 பேரிடம் கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 1954ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ஆம் தேதி இதற்கான வாக்கெடுப்பு வில்லியனூர் அருகே உள்ள கீழூரில் நடைபெற்றது.
இந்த வாக்கெடுப்பில் இந்தியாவுடன் இணைவதற்கு ஆதரவாக 170 பேரும், எதிராக எட்டு பேரும் வாக்களித்தனர். அதைத்தொடர்ந்து பல்வேறு சட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு பிரான்ஸ் நாட்டு நாடாளுமன்றத்தில் 1962ஆம் ஆண்டு ஆகஸ்டு 16ஆம் தேதி புதுச்சேரி, இந்தியாவுடன் இணைய ஒப்புதல் அளித்து சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டது.