கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக புதுச்சேரியில் கஞ்சா விற்பனை அதிகளவில் நடைபெற்றுவருகிறது. இதனை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர்.
இதனிடையே புதுவை வேல்ராம்பட்டில் உள்ள தனியார் கல்லூரி அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக முதலியார்பேட்டை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து உதவி ஆய்வாளர் தமிழரசன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளுடன் நின்றுகொண்டிருந்த 2 இளைஞர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த காவல்துறையினர், அவர்களிடம் சோதனை நடத்தினர்.
அப்போது, அவர்களிடம் கஞ்சா பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காவல்துறையினர் மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் முருகம்பாக்கம் சேத்திலால் நகரை சேர்ந்த அன்பரசன், குமாரவேல் நகரை சேர்ந்த சிவகாஷ் என்பதும், இவர்கள் நைனார்மண்டபத்தை சேர்ந்த கீர்த்திவாசன் என்பவருடன் சேர்ந்து மினிவேனில் கரோனா அவசர ஸ்டிக்கரை ஒட்டி திருவண்ணாமலையில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து, சிறுவர்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து அன்பரசன், சிவகாஷ், கீர்த்திவாசன் ஆகியோருடன் மினிவேன் ஓட்டுனர் ஜான்பாட்ஷாவையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மினிவேன், மோட்டார் சைக்கிள்,3 செல்போன், கஞ்சா பொட்டலங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.